தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை

thoothukudi voc College

தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை

தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடுமுதலமைச்சர் உத்தரவின்படி தமிழ் மரபின் தூய்மையும் பண்பாட்டின்செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மூன்றாம் கட்ட மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்வு இன்று(17.08.2023) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 600 மாணவர்கள்  கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு சார்பில் SVEEP வாக்காளர் விழிப்புணர்வு அரங்கும் அமைக்கப்பட்டு விழிப்புணார்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் அரங்குகளை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.  மாணவர்களுக்கு தமிழ் பெருமிதம் மற்றும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நான் முதல்வன், புதுமைப்பெண், உயர்கல்வி உதவித்தொகை திட்டங்கள் தொடர்பாக விளக்கங்கள் தொடர்புடைய மாவட்ட அலுவலர்களால் வழங்கப்பட்டது. தமிழ்ப்பெருமிதம் புத்தகத்திலிருந்து சிறப்பாக உரையாற்றிய மாணவர்கள் பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வியாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் துனை ஆட்சியர் (பயிற்சி) மி.பிரபு, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், கல்வியின்  முக்கியத்துவம் குறித்தும், கல்விக்கடன் வாய்ப்புகள் குறித்தும் பேசினார். வ.உ.சி. கல்லூரி முதல்வர் முனைவர் சொ.வீரபாகு தாய்மொழி கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழ்க்கனவு நிகழ்வின் சிறப்புகள் குறித்து பேசினார். 

சிறப்பு விருத்தினராக எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்,  கலந்துகொண்டு, ‘நமக்கு வாய்த்த ஐந்து வருடங்கள்” என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைகள் பற்றியும், சிறப்பு வாய்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களின் தியாகங்கள் குறித்தும், தமிழ் பண்பாட்டின் சிறந்த விழுமியங்கள் குறித்தும் பேசினார். மேலும், நமக்கு வாய்த்த ஐந்து மகுடங்களாக இந்தியத் திருநாட்டில் பிறந்ததையும், தமிழ்நாட்டில்  வாழ்வதையும், தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பதையும், தாய் மற்றும் தந்தை அன்பினைப் பெற்றிருப்பதையும், கல்வியால் வாழ்வில் அடையும் வெற்றிகள் குறித்தும் பேசினார். 

இதையடுத்து பேச்சாளரின் உரையிலிருந்து சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கு பேச்சாளர்கள் பதிலளித்தனர். மேலும், அவர்கள் கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகிகளாக  தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், பெருமிதச்செல்வன், பெருமிதச்செல்வியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  

நிகழ்ச்சியில் தமிழ் இணைய கல்விக்கழக பொறுப்பாளர் அருண், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தில்லைபாண்டி, உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) ஏஞ்சல் விஜய நிர்மலா, கல்லூரிக் கல்வி இயக்குநரக பொறுப்பு அலுவலர் பேராசிரியர் தேவராஜ், வ.உ.சி. கல்லூரி தொடர்பு அலுவலர் முனைவர் சி.ஜாக்சன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.