தமிழகத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை ஊக்குவிக்கும் அரசு

Happy street

தமிழகத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை ஊக்குவிக்கும் அரசு

இந்தியாவின் கலாச்சாரத்தை ஒழித்தால்தான் இங்கிலாந்து கலாசாரத்தை புகுத்தமுடியும் என்றான் வெள்ளைக்கார மெக்காலே. அதற்காகவே அனைத்து கல்வி முறையையும் மாற்றினான். ஆனாலும் மரபில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்திய கலாச்சாரத்திற்குதான் தற்போது உலக அரங்கில் மதிப்பு இருக்கிறது. இந்திய பண்பாடு, கலாசாரத்தை பார்த்து பிரமிக்கும் உலக மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மேலை நாட்டு கலாச்சாரம் நிலையானது அல்ல என்பதை பலரும் உணர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மேலை நாட்டு கலாச்சாரத்தை நோக்கி அழைத்து செல்லும் செயல் நடைபெற்று வருவதை பார்க்கிறோம். அதாவது வெள்ளக்காரன் ஆசையை நிறைவேற்றும் வேலையில் தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுவதாகவே தெரிகிறது. இந்து கோயில்களை நிர்வகிக்கும் பணியில் ஆளும் தரப்புக்கு எதிராக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு வகை. 

இளைஞர் சக்தியை நல்ல வழியில் அழைத்து செல்வதற்கு பதிலாக தெருவில் நின்று ஆட்டம் போடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது தமிழக அரசு. கலெக்டர் அனுமதியுடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்கிற பெயரில் சினிமா பாடலுக்கு தெருவில் நின்று ஆண்களும், பெண்களும் ஆட்டம் போடும் நிகழ்ச்சி அது. பக்கத்தில் நின்று ஆடுவது யார் என்று கூட தெரியாது. ஆனால் அவர்களோடு ஆட்டம் போடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். கேட்டால், மன அழுத்தத்திற்கு இதுதான் மருந்து என்கிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நல்ல மருந்துதான். ஆனால் அது யார் யாரோடு ஆட வேண்டும் என்பதில்லையா?. இது, இருக்கும் கட்டுப்பாட்டை உடைக்கும் செயல் ஆகாதா?. குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட இடங்களில் கூடி ஆடிபாடுவதில் தவறில்லை. இது ஆண்டாண்டு காலம் கோயில்களில் நடக்கும் செயல்கள்தான். அங்கு எது நடந்தாலும் அந்த கோயில் நிர்வாகம்தான் பொறுப்பு. அங்குள்ளவர்கள் கோயில் குறித்த வரைமுறையுடனே நடந்து கொள்வர். ஆனால் தெருவில் ஆட்டம் போடுபவர்களுக்கு என்ன வரையறை இருக்கிறது?. வெள்ளைக்காரன் ஆலோசனையை ஏற்று இந்திய கலாச்சார கட்டமைப்பை உடைப்பதுதான் தற்போதைய திமுக அரசின் கொள்கையா?. இது ஏற்கமுடியாத செயல். தமிழக அரசு இதனை நிறுத்த வேண்டும். பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அவரவர் எல்லைக்குள் ஆடிபாடி விளையாடலாம். அதனை தடுக்காமல் இருந்தால் போது. சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என்று கூறி கோயில்களில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் அரசு நிர்வாகம், இப்படி தெருவில் கூத்தடிப்பதை எதற்காக அனுமதிக்கிறது, ஏற்பாடு செய்கிறது?.

 

இந்த கலாச்சார கொலை செய்தியை எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் மீடியாக்கல் வரிந்து கட்டிக் கொண்டி வெளியிட்டு எதிர்கால சந்ததிகளுக்கு தீங்கு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தவறு என்று எதாவது சேனல் கூறியிருந்தால் அதனை வரவேற்று பாராட்டலாம். கலாச்சாரத்தை கெடுக்கும் நிகழ்ச்சிக்கு துணைபோகும் ஊடகங்களை மக்கள் ஒதுக்க வேண்டும்.