தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியம் - முறையான அறிவிப்பு பலகை இல்லாமல் நடக்கும் விபத்து
National High way

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் பகுதியில் புதிதாக பாலம் கட்டும் வேலைகள் நடந்து வருகிறது. பிரதான தேசிய நெடுஞ்சாலையில் விரைவாக நடந்து வரும் பணிகள் குறித்து நமது நடுநிலை.காம் -ல் செய்தி வெளியிட்டிருந்தோம். முறையாக அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. அதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அர்த்ததில் இருந்தது அந்த செய்தி.
அதாவது, இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடம் தூரத்தில் இருந்து தெரிவதில்லை. மிக அருகில் வந்த பிறகே தெரிந்து கொள்ள முடிவதால் பதற்றத்துடன் வாகனத்தை செலுத்துகின்றனர். இது எப்போதும் சரியாக இருக்கும் என்று நினைத்துவிட முடியாது. சற்று கவனக்குறைவானால் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே சற்று முன்னதாகவே அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும் அல்லது அந்த இடத்தில் பெரிய அளவில் அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும். இந்த கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிடபட்டிருந்தது.
ஆனால் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. தற்போது நமது செய்தி குறிப்பிட்டது போலவே நேற்றிரவு வாகனம் ஒன்று அறிவிப்பு பலகை கண்ணுக்கு தெரியாமல் விபத்தில் சிக்கியிருக்கிறது. அதில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒருவரை மருத்துவ சிகிச்சைக்காக காரில் நெல்லைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். சிகிச்சை முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது கார் நாம் குறிப்பிடும் அந்தோணியார்புரம் பகுதியில் அறிவிப்பு பலகை தெரியாமல் விபத்தில் சிக்கியிருக்கிறது. அதில் சிகிச்சைக்காக சென்று திரும்பியவர் மற்றும் அவரது உறவினர்கள் என்று மூவர் படுகாயமடைந்தனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்த முதியவர் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
எனவே இனியாவது பொதுமக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் குறிப்பிட்ட அந்த இடத்தில் முறையாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.