நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் கையெழுத்து போடமாட்டேன் - ஆளுநரின் பதில் சரியானதே
Neet
இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு குறித்த சர்ச்சை நீண்ட காலமாக இழுத்துக் கொண்டே போகிறது. அதிலும் தமிழக அரசியல்வாதிகள் சிலர் நீட் தேர்வுக்கு எதிராகவே நிலை கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தாண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தியாவிலேயே அதிகம் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். மாணவர்கள் மத்தியில் இது சகஜம் என்கிற நிலை வந்துவிட்டது.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு மனநிலையால் மாணவ, மாணவியர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். சிலர் உயிரையும் விட்டனர். அதெற்கெல்லாம் எதிர் பிரசாரமே காரணம் என்கிறார்கள் நீட் தேர்வை ஆதரிப்போர். அப்படி என்னதான் இருக்கிறது நீட் தேர்வில். உயர் கல்வி படிக்க போகும் மாணவர்களுக்கான நுழைவு தேர்வு அது அவ்வளவுதான். நேரடியாக அதனை மட்டும் பார்த்தால் கஷ்டமாகத்தான் தெரியும். அதை எதிர் கொள்ளும் மாணவர்கள் தகுதியான கல்வியை கற்றிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சற்று கஷ்டம்தான். அப்படியானால் அதற்கு உரிய பயிற்சி வழங்குவதுதான் சரியான முயற்சியாக இருக்க முடியும். அதற்கு பதிலாக அந்த தேர்வே நடத்தக் கூடாது என்றால் அது எந்த வகையான நியாயம் என்று தெரியவில்லை.
சரி, எதிர்ப்பவர்கள் கூற்றுப்படி பார்த்தால் நீட் தேர்வு நடத்தாத காலங்களில் ஏழை மாணவ, மாணவியர் மருத்துவ கல்வி பெற்றதற்கும் தற்போது நீட் தேர்வு நடத்தும் போது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கும் எதாவது வித்தியாசம் உண்டா என்று பார்க்க வேண்டும். ஆமாம் நிறைய உண்டு. முன்பெல்லாம் பெரிய பெரிய தனியார் மருத்துவ கல்வி நிலையங்களில் மருத்துவ சீட்டிற்கு பெரிய தொகை செலவு செய்ய வேண்டியது இருந்தது. அதில் ஏழை மாணவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத நிலை இருந்தது. இப்போது படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியும்.
அப்படியானால் ஏன் எதிர்ப்பு கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், மாநில கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தேசிய அளவிலான எதையுமே அதரிப்பதில்லை. இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை எதிர்ப்பதுபோல் நீட் தேர்வையும் எதிர்க்கிறார்கள். இந்தியும், சமஸ்கிருதமும் இந்தியா முழுவதும் பரவிவிட்டால், இந்திய கலாச்சாரம் அனைவர் மத்தியிலும் நிலை கொண்டுவிடும். அப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டால் மற்ற கலாச்சாரத்தை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். அதனால்தான் முன்னெச்சரிக்கையாக இப்படி எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
நீட் தேர்வை பொறுத்தவரை வேறு வழியில்லாமல் தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மறந்து போன விவகாரத்தை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது நீட் விவகாரம். இவ்வாண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்ட ஆசைப்பட்ட ஆளுநர் ரவி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பெற்றோர் ஒருவர்,நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என்று கேட்டார். அதனை எதிர்பார்க்காத ஆளுநர், சற்று உணர்ச்சிவசப்பட்டவராக நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன். நீட் தேர்விற்கு, கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டி அவசியம் இல்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும்போதே நீ தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக் குறியாக்கும். நீட் தேர்வுக்கு முன் அரசு பள்ளி மாணவர்கள் 100 முதல் 200 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகலில் படித்தனர். நீட் தேர்வு வந்தபின் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்துவங்கியது.
கடந்த 2019 - 20 ல் நீட் தேர்வுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பின், தற்போது 600 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வு தொடர்பாக எந்த தற்கொலையும் நடக்கவில்லை.ஆனால் முன்பெல்லாம் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதும், ஒரு கட்சி தலைவர், 20 லட்சம் ரூபாய் வழங்குவதும் வழக்கமாக இருந்தது. அரசியல்வாதிகளின் அரசியலுக்கு மாணவர்கள் பலியாகினர். நீட் தொடர்பான தவறான புரிதலை கைவிடவேண்டும். நீட் தேர்வு, மாணவர்களை போட்டி திறன் கொண்டவர்களாக உருவாக்குகிறது. மருத்துவ படிப்பு என்பது, 1,000 கோடி ரூபாய் வரையிலான வணிகமாக இருந்தது.தற்போது இது தடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன’’என்றார்.
உடனே ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படுகிறார் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்து வந்தது. என்றாலும் ஆளுநர் கூறிய கருத்துக்களும், அவருடைய நிலைபாடுகளுமே சரியானதுதான் என்பதே நடுநிலையாளர்களின் நிலையாகும்.