தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

Press club

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் பிரசித்திபெற்ற ஆன்மிக ஸ்தலங்கள், தாமிரபரணி ஆற்றை மையமாக கொண்ட விவசாயம், இந்திய அளவில் முக்கிய இடத்தில் உள்ள உப்பு உற்பத்தி, பல்வேறு உற்பத்தி தொழில்கள், விமான சேவை, நான்கு வழிச்சாலை என முக்கிய அம்சம் கொண்டதாகும். இதனால் இம்மாவட்டம் குறித்த தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பேருதவியாக இருந்து வருகிறார்கள் பத்திரிக்கை, மீடியாவை சேர்ந்தவர்கள். அத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கான நலன் அவ்வப்போது அரசுகளால் பேசப்படுவது வாடிக்கைதான் என்றாலும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் நிலையோ எப்போதும் போலத்தான் இருக்கிறது.

அரசு வழங்கும் சலுகை விலை நிலத்தை வாங்குவதற்கு பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இவர்களின் விருப்பம் நிறைவேறியதாக தெரியவில்லை. தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அரசு நிர்வாகத்திற்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அமைச்சரும், கலெக்டரும் குறிப்பிட்ட சில நிமிடங்கள் பத்திரிக்கையாளர்களுக்காக நேரம் ஒதுக்கி ஆலோசனை நடத்தினாலே பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை நிறைவேறிவிடும் என்பதுதான் உண்மை. 

இந்தநிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 - 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழுவைச் சேர்ந்தவர்கள் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது குறித்த மனுவை அமைச்சர் கீதாஜீவனிடம் கொடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். 

அப்போது பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணபெருமாள், குமார், மாரிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.