மாநில சுயாட்சி என்கிற கோஷம்.. பிரிவினைவாத கோஷமே.!

india

மாநில சுயாட்சி என்கிற கோஷம்.. பிரிவினைவாத கோஷமே.!

குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சி குடும்பத்தை வளமையாகவோ, வலிமையாகவோ ஆக்கலாம். தன்னைத்தானே மட்டும் வளர்த்து கொள்ள முனையும் குடும்ப உறுப்பினரால் குடும்ப ஒற்றுமை சிதையும். உழைப்பும் அதன் மூலமான உயர்வும் அத்துனை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குடும்ப தலைமையின் சிரத்தன்மையை பொறுத்தது. அதுபோல்தான் முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கிய பாரத தேசத்தின் சிரத்தன்மையும் அனைத்து மாநிலங்களின் ஒற்றுமையில் உள்ளது. 

வளர்ச்சியும், வலிமையும் அனைத்துக்கும் பொதுவானது. குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சி, இன்னொரு பகுதியின் உயர்விற்கும் உதவியாக இருக்க வேண்டும். அதுதான் வலிமையான தேசியத்தையும்,தேசத்தையும் தரும். குறிப்பிட்ட பகுதியின் தன்னிறைவு, குறிப்பிட்ட பகுதி மக்கள் வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்தகைய வளர்ச்சி காலப்போக்கில் மற்றவர்களை சுமையாக கருதும் மனநிலைக்கு தள்ளிவிடும். அனைத்து பகுதிக்குமான வளர்ச்சியே ஒட்டுமொத்த தேசத்துக்கான வளர்ச்சியாக அமையும். 

சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் எல்லாம் ஒட்டுமொத்த தேசத்துக்குமானதாக இருப்பதே தேசியத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மாநிலங்களுக்கு மாநிலம் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் மாறுபடும்போது தேசிய அளவிலான அறிவுறுத்தல்கள் அலட்சியமாக்கப்பட்டுவிடும். மாநில சுயாட்சியை கொள்கையாக கொண்டவர்கள் இந்திய தேசத்தின் அளவில் இருந்து கொண்டு பார்க்கிறார்கள். இந்த இந்திய தேசத்தை உலக அளவில் இருந்து பார்க்க வேண்டும். அப்படி பார்ப்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் புலப்படும். நிலப்பரப்பு ரீதியாக பல்வேறு பிரிவாக இருந்தாலும் கலாச்சார ரீதியாக ஒற்றுமையாக இருந்ததால்தான் இந்தியா என்று அழைக்கப்படும் பாரதம் ஒற்றுமையுடன் இருக்கிறது. அப்படியானால் கலாச்சார ரீதியாக இந்தியாவை வடிவமைத்து வைப்பதே சரியான வழியாகும். 

அப்படியானால் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் குறிப்பிட்ட மதத்தை அனைவரும் ஏற்கவேண்டுமா என்கிற கேள்வி எழும். அப்படியல்ல, இந்திய கலாச்சாரம்  என்பதே அனைத்துவிதமான நல்வழிப்படுத்துதலையும் ஏற்கும் கலாச்சாரம்தான். வேறு எந்த மதத்திற்கும், வேறு எந்த கலாச்சாரத்துக்கும் எதிராக பாரத கலாச்சாரம் சுழன்றது இல்லை. மற்றவர்களின் முன்னெடுப்பிற்கு எதிராக சில இடங்களில் உள்நாட்டு மத உந்துதல்கள் இருந்திருக்கும். மற்றப்படி மத துவேசம் இருப்பதில்லை. மற்றவர்களின் ஆதரவை பெறுவதற்காக உள்நாட்டு கலாச்சாரம் மற்றும் மதத்தை அலட்சியப்படுத்தியவர்களுக்கு எதிராக சில அரசியல் முன்னெடுப்புகள் இருந்திருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் பொது என்கிற நிலை வரும்போது, அனைவரும் அவரவர் விருப்பப்படி வாழும் நிலை வரும்.

தேசிய அளவிலான திட்டங்களை ஆதரிப்பவர்கள் வேணுமென்றால் மாநில சுயாட்சி பற்றி பேசலாம். தேசிய அளவிலான திட்டங்கள் பலவற்றையும் எதிர்ப்பவர்கள் மாநில சுயாட்சி என்று பேசுவது தவறு. மாநிலம் சுயமாக ஆட்சி செய்யும் என்றால் அங்கே எப்படி தேசியம் நிலைக்கும்?. படிப்படியாக அது பிரிவினைக்கு வித்திடும்தானே?. எனவே மாநில சுயாட்சி என்கிற கோஷம்,  பிரிவினைவாத கோஷம் என்பதே ஆகும்.