தைப்பூச தெப்பத் திருவிழாவை நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது – வக்கீல் சண்முகசுந்தரம் கடும் விமர்சனம்
தெப்பத் திருவிழா
தூத்துக்குடி மாநகரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளமாக நடைபெற்று வரும் தெப்பக்குள தெப்பத் திருவிழாவை, இந்த ஆண்டு நடத்த மறுப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தைப்பூச தெப்பத் திருவிழா என்பது வெறும் ஒரு விழா அல்ல; அது தூத்துக்குடி மக்களின் ஆன்மிக வாழ்வோடு பின்னிப்பிணைந்த பாரம்பரிய மரபாகும். தெப்பக்குளம் பழுதடைந்துள்ளதாகக் காரணம் காட்டி, இந்தப் பாரம்பரிய விழாவை ரத்து செய்ய முயல்வது, ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் ஆன்மிக உணர்வுகளையும் புறக்கணிக்கும் செயலாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பராமரிப்பு பொறுப்பு யாருக்கு?
தெப்பக்குளத்தின் பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் அடிப்படை கடமை என்றும், அந்த கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டு தற்போது விழாவை ரத்து செய்ய முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், “அறநிலையத்துறை கூறியதன்படியே செயல்படுகிறோம்” என கூறி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வது கபட நாடகமாகவே பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் விஷயங்களில் மாநகராட்சியும் தன்னிச்சையான முடிவெடுத்து பொறுப்பேற்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
உடனடி நடவடிக்கை கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், தெப்பக்குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாற்று ஏற்பாடுகள் தேவைப்பட்டால் அதையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த ஆண்டுக்கான தைப்பூச தெப்பத் திருவிழாவை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெப்பத் திருவிழாவை நடத்தத் தவறினால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடத்தப்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாநில ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, ஆன்மீகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் உஷாதேவி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிதலீஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், விஷயத்தை அறிந்த சில சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “குறிப்பிட்ட தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்போது பள்ளம் விழுந்துள்ளது. அந்தப் பகுதியை முழுமையாக சரி செய்யாமல் எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் நடத்துவது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானது. விழாவிற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக பணிகளை மேற்கொள்வதா அல்லது மாற்று ஏற்பாடு செய்யலாமா என்பது குறித்து அனைத்து தரப்பினரும் – அறநிலையத்துறை, மாநகராட்சி, அரசியல் கட்சிகள், பக்தர்கள் – ஒன்றிணைந்து கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பையும் பக்தி மரபையும் சமநிலையில் கொண்டு செல்ல வேண்டிய இச்சூழலில், அதிகாரிகள் உரிய முடிவை விரைந்து எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
nadunilai.com