நெல்லை பேருந்துகள் 1 வருடமாக புதுக்கோட்டை ஊருக்குள் வரவில்லை - மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியவே இல்லையா?
High way news
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை ஊரை சுற்றி சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினசரி இந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். எனவே இந்த ஊருக்கு அதிக அளவில் போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது. அதன்படி கடந்த காலங்களில் திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி அது பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் வகையில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. ஆனால் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. நெல்லை, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. பகல் ஆனாலும், நள்ளிரவு ஆனாலும் அதே நிலைதான் இருந்து வருகிறது. வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,மாணவ,மாணவியர் என அனைவருமே தேசிய நெடுஞ்சாலையை தாண்டி ஊருக்குள் நடந்து செல்லும் ஆபத்தான நிலையைத்தான் அனுபவித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. போதாதகுறைக்கு இரவு நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் பேருந்துகளும் கூட புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம் கட்ட வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பஸ் ஸ்டாப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் யூனியன் ஆபீஸ் அருகே இருப்பது போல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகள் சங்கத்தினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்டப்படுமானால் அந்த வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி வழித்தடங்களுக்கு பேருந்துகள் சென்று வர வசதியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை பழைய பாலத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வைக்கப்படும் கோரிக்கைக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாக பதில் தருகிறார்கள்.
ஆனால் ஓராண்டிற்கு மேலாகியும் அப்பணி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கபட்டதாக தெரியவில்லை. தொடர்ந்து நெல்லை மார்க்கத்தில் இருந்து பேருந்தில் வரும் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஊருக்கு வெளியே நடுரோட்டில் இறக்கிவிடப்படுகின்றனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை ஒவ்வொரு நாளும் மக்கள் கடந்து வருகின்றனர். எனவே அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. புதுக்கோட்டை பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளை நேரடியாக புதுக்கோட்டை மக்களின் நிலையை பார்க்க செய்ய வேண்டும். மூன்று துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து புதுக்கோட்டை பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பஸ் ஸ்டாப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் யூனியன் ஆபீஸ் அருகே இருப்பது போல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு நிர்வாகத்தில் எந்த அதிகாரிகளும், மத்திய அரசு நிர்வாகத்தில் எந்த அதிகாரிகளும் இந்த கோரிக்கையை கண்டு கொள்வதாக தெரியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் கேட்டு வரும் இந்த கோரிக்கைகளில் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. வரும் தேர்தல் நேரத்தில் மக்கள் கேள்வி கேட்க தயாராக உள்ளனர். அப்போது மத்திய அரசின் பாஜகவும், தமிழக அரசின் திமுகவும் பதில் சொல்ல வேண்டியது வரும்.
nadunilai.com