திருச்செந்தூர் அருள் மிகு செந்திலாண்டவர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

Thiruchendur Murugan

திருச்செந்தூர் அருள் மிகு செந்திலாண்டவர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

திருச்செந்தூர் அருள் மிகு செந்திலாண்டவர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நாளை(7.07.2025)நடக்கிறது. இதையொட்டி, 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 ட்ரோன்கள் மூலம்ன் புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி என்றழைக்கப்படும் செந்திலாண்டவர் திருக்கோயிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கும்பாபிஷேக திருப்பணிகலும் நிறைவு பெற்றுள்ளன. இக்கோயிலில், நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. 

நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர கலசங்கள், மூலவர்,வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும், புனித நீரால் அபிஷேகம் செய்கின்றனர்.  இந்த அபிஷேக நீர், 20 ட்ரோன்கள் மூலம் கோயில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூடியிருக்கும் பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த  26ம் தேதி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. கடந்த 1ம் தேதி மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உட்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்டயாகசாலையில், 71 ஹோம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜை செய்து வருகின்றனர். திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளுக்கு தனியாக 5 ஓம குண்டங்கள் பட்டாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகள் நேற்று மாலை நடத்தினர். 

மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் நகரில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் வெளியே 20 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடம், 30 போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கடற்கரைக்கு மட்டும் கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் அனுமதிகப்படுகிறார்கள். கோயில் பிரகாரத்தில் நின்று கும்பாபிஷேகத்தை காண யாரையும் அனுமதிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கோயில் விமான தளத்தில் மடாதிபதிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் என 800 பேர் அனுமதிக்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவித்தனர். ஆனால் இதனை கோவில் நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை. 

வெளியூரில் இருந்து வரும் 400 சிறப்பு பேருந்துகளும் தற்காலிக வாகன நிறுத்துமிடம் வரையிலும், அங்கிருந்து ரதவீதிகள் வரை 30 நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிரது. நகரில் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்கு 70 இடங்களில் எல்.இ.டி திரைகள் வைக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் வளாகம், நகரில் 1000 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் கண்ட்ரோல் ரூமிலிருந்து டிரோன் கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட உள்ளது. இதனை மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் கவனித்து வருகிறார். 

திருச்செந்தூர் அருள் மிகு செந்திலாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 1500 செவ்வாழை மரங்கள், 5 ஆயிரம் செங்கரும்புகள், ஆயிரத்து 500 இஞ்சி குழைகள், பழாபழங்கள், மா,மஞ்சள் குழைகள், முந்திரி கொத்து, பாக்குமரங்கள் ஆகியவற்றின் மூலம் கோயில் உட்பிரகாரமும், கோயில் வளாகமும் அலங்கரிக்கப்படுகிறது. யாக சாலைகளில் இதற்காக கரூர், சிக்கமங்களூர் உள்ளிட்ட வெளியூர்கலிலிருந்து தோரணங்கள் சுமார் 15க்கும் மேற்பட்ட லாரிகளில் வரவழைக்கப்பட்டுள்ளன. 

திருச்செந்தூர் கோயிலில் உள்ள 137 அடி உயர பிரமாண்ட ராஜகோபுரத்தின் நேற்று இரவு லைட் ஷோ ஏற்பாடுகள் செய்யப்பட்டு காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 10ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நாளை மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. அனைவரும் வந்து முருகப்பெருமானின் அருளை பெற்று செல்க.