நாலுபேர் சேர்ந்து என் மருமகளுக்கு விசத்தை ஊற்றி கொல்ல பார்த்தாங்க - கதறும் தாய்மாமன்

crime

நாலுபேர் சேர்ந்து என் மருமகளுக்கு விசத்தை ஊற்றி கொல்ல பார்த்தாங்க - கதறும் தாய்மாமன்

எத்தனை விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வந்தாலும் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாரதலெட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.  

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாரதலெட்சுமையை கோட்டைக்காடு கணேசன் மகன் அய்யனாருக்கு கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அடிக்கடி பாரதலெட்சுமி அவர்களது தாய்வீடு சென்றுவருவதுமாக இருந்துள்ளது. இந்நிலையில் கணவர் வீட்டில் இருந்த பாரதலெட்சுமி கடந்த 21ம்தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி விசமுறிவு பிரிவு பகுதியில் சேர்க்கப்பட்டார். 

இந்த விவகாரம் குறித்து பாரதலெட்சுமியின் தாய்மாமனான ஆறுமுகத்திடம் கேட்டோம். அவர், என் அக்கா மகள் கல்யாணத்திற்கு பேசும்போது, நகை எதுவுமே வேண்டாம்னுதான் மாப்பிள்ளை வீட்டார் சொன்னாங்க. ஆனாலும் 12 பவுண் நகை, 3 லட்சப் ரூபாய் சீர், சீராட்டு எல்லாம் கொடுத்து கல்யாணம் சிறப்பாகத்தான் நடந்தது. அதுக்கு பிறகு என்ன நடந்ததோ தெரியலை, என் அக்கா மகள் அவ கணவர் வீட்டில் இருந்த நாட்களைவிட அதிகம் அவ அம்மா வீட்டில்தான் இருந்திருக்கா. ஆரம்பத்தில் நகை வேண்டாம் என்று சொன்னவங்க. பக்கத்து வீடுகளில் அதிக பவுண் போட்டு கல்யாணம் நடப்பதை பார்த்து மனசு மாறி எங்க அக்கா வீட்டிலும் கேட்டாங்க. உன் தாய் வீட்டில் போய் கூடுதல் நகை வாங்கிவிட்டு வா என்று சொல்லிதான் அனுப்பியிருக்காங்க. அதுமட்டுமில்லாமல் அந்த பையனுக்கு இரண்டாம் தாரம்தான் நல்லா இருக்கும் என்று யாரோ சொன்னதை வைச்சு பாரத லெட்சுமியை வெறுத்திருக்காங்க. அவ வயித்துல பிள்ளை எதுவும் உருவாகிவிடாதபடி பார்த்திருக்காங்க. இப்படித்தான் அன்றைக்கும் பிரச்னை நடந்திருக்கு. 

தாங்க முடியாமல் என் அக்கா குடும்பம் மகளிர் போலீசுக்கு போனாங்க. அங்கே இரண்டு தரப்பையும் கூட்டி வைச்சு சமாதானம் பேசினாங்க. பாரத லட்சுமியை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க. அன்று இரவில் மீண்டும் பிரச்னை வந்து அந்த குடும்பத்தில் நாலுபேர் சேர்ந்து என் அக்கா மகள் வாயில விசத்தை ஊத்தி கொல்ல பார்த்தாங்க. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவளே இதனை வாக்குமூலமாக சொல்லியிருக்காள். ஆனால் போலீஸ் நம்பவில்லை என்பதுபோல் தெரிகிறது. இதுவரை வழக்குபதிவு செய்யவில்லை. அப்படி போட்டால் இரண்டு தரப்பு மீதும் போடுவோம் என்கிறார்கள். அந்த பொண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிராக ஊரே திரண்டு போய் கண்டித்தை அவர்கள் சொல்றாங்க. அந்த இடத்தில் நாங்க அவங்க குடும்பத்தை காப்பாற்றவே போனோம். இத்தனை கொடுமை செய்த பிறகும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளூர் போலீஸ் மட்டுமில்லாமல் மாவட்ட எஸ்.பிகிட்டேயும் கூட கொடுத்துவிட்டோம். இனிமேல் என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார். 

இந்த புகாருக்கு எதிர் தரப்பு மற்றும் போலீஸ் விளக்கம் அல்லது கருத்து கூறுவதாக இருந்தால் அதனையும் இத்துடன் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.