நவீன ஸ்மார்ட் கட்டமைப்பு திட்டங்களே வெள்ளம், வெப்பங்கள் உள்ளிட்ட அசாதாரணங்களுக்கு காரணமா?
smart
நீர், நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்களின் தொகுப்பே இந்த உலகம். இந்த பிரபஞ்சமே அவற்றால் கட்டமைக்கப்பட்டதுதான். இவற்றில் எதாவது ஒன்றோ, இரண்டோ ஓரிடத்தில் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம் ஆனால் எங்கும் இந்த பஞ்ச பூதங்களே ஆதாரமாகும். இவற்றின் தாக்கத்தை பூமியில் வாழும் உயிர்களின் ஒன்றான நாம் உணருகிறோம். அதில், குளிர் பிரதேசங்கள், வெப்ப பிரதேசங்கள், வறண்ட பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தட்பவெப்பநிலை கொண்ட அமைப்பு இப்பூமியில் அமைந்திருக்கிறது. காற்று, மழை, வளர்ச்சி, காற்று, மழை, வளர்ச்சி என்கிற சுழற்சியில் ஏற்படும் மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசுபாடு காரணம் என்கிறார்கள். அதனால் உலகமே வெப்பமயமாகிறது என்று அறிவியலார் நீண்ட காலம் கூறிவருகின்றனர். ஆக, பஞ்ச பூதங்களில் பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும் என்கிறார்கள். அந்த வகையில்தான் பல்வேறு இயற்கை எழுச்சி, சீற்றம் எல்லாம் நடக்கிறது என்று கணிக்க முடிகிறது.
ஏகத்திற்கும் மரங்களாகவும், செடி,கொடிகளாகவும், புல் பூண்டுகளாகவும், ஆற்று மணல் சிதறி கிடப்பதுபோல் நிலப்பரப்பு விசாலமாக இருக்கும்போது, அதில் எந்த வெப்பமோ, மழையோ சேதாரத்தை ஏற்படுத்த முடிவதில்லை. வெப்பத்தையும், மழையையும் இவைகள் ஏற்றுக் கொள்ளும் தன்மை பெறுகின்றன. ஆனால் அவைகளில் குறைவு ஏற்படும்போது, நேரடி பாதிப்பை நாம் சந்திக்கின்றோம். வெறும் நிலப்பரப்பாக இருப்பதில் கடின தன்மையுள்ள சாலையை அமைக்கிறோம். நிலத்துக்குள் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு வீடு,தெரு,ரோடெங்கும் சிமெண்ட் தரைகளை உருவாக்குகிறோம். அப்படிபட்ட நகரைத்தான் ஸ்மார்ட் சிட்டி என்கிறோம். ஒரு சொட்டு மழை நீரை கூட பூமிக்குள் விடமாட்டோம் என்று தடுப்பதுபோல் படுத்து உறங்கும் சாலை, தரைகளில் விழும் மழை நீர் எங்கே போகும்?. பல சொட்டுக்கள் சேர்ந்து உருவாகும் வெள்ளம் வெளியேற வழி தேடும்போது குறுக்கே கட்டப்பட்டிருக்கும் வீடுகளும், இன்ன பிற கட்டிதத்துக்குள்ளும் அது நுழையும் நிலை ஏற்படுகிறது.
எத்தனை கோடி லிட்டர் மழை நீரையும் தாங்கிய மணல் தரை தண்ணீருக்காக ஏங்கி கொண்டிருக்கும்போது சிமெண்ட் தரை வழியாக அது வெளியேற்றப்பட்டுவிடுகிறது. அப்படியானால் நிலத்தடியில் நீர் தேங்குவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்,ஏராளம். குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரம் செய்து கொண்டு அரசே மக்களுக்கு மதுவை விற்பதுபோல், எம்.சாண்ட் என்கிற பெயரில் மலையையும்,மணலையும் உடைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். இது கெளரவமாக செய்யும் தவறான தொழில் என்பதை யாரும் யோசிப்பதில்லை.
இப்படியாக ஸ்மாட்ர் சிட்டி என்கிற பெயரில் நகரங்கள் எல்லாம் சிமெண்ட், தார் போன்ற பொருளால் மூடப்படும்போது மழை நீர் வெள்ளமாக திரளத்தானே செய்யும்?. அந்த சிமெண்ட் சாலை, தரை மூலம் வெப்பம் உருவாகத்தானே செய்யும்?. பாதிப்பை மட்டுமே சொல்லி கதறும் மக்கள், எதனால் இந்த நிலை? எது அவசியம்? எது அவசியம் இல்லை? என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை. இதையும் தாண்டி வெப்பத்திற்கும், வெள்ளத்திற்கும் அறிவியல் காரணங்கள் இருக்கலாம். இப்படியும் இருக்கலாம் என்பதே எமது கருத்து. வெப்பத்துக்கும், வெள்ளத்துக்கும் வேறு காரணங்கள் இருக்கிறது என்று கருத்து சொல்ல யாராவது முன் வந்தால் அவர்கள் கருத்தையும் இத்துடன் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.
இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விமர்சிக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எதெல்லாம் நகருக்குள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நகரை உருவாக்கும் அத்திட்டம் அவசியமே. அதேவேளை, மழைநீரை வகைப்படுத்தும் திட்டம் இதில் அதிகம் இடம்பெற வேண்டும். அதாவது மழை நீர் சேமிப்பு திட்டம் அவசியம். மழை பெய்ததும் மழை நீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டும் என்கிற பதற்ற நிலை இல்லாத நிலை வேண்டும். பழங்காலங்களில் நகருக்கு நடுவே கோவிலும், அதற்கு நடுவே கோவில்குளங்களும் இருந்தன. ஆனால் தண்ணீரை தேக்கி வைக்கும் மனநிலை இருப்பதாக தெரியவில்லை. வெள்ள அபாயம்தேனே அதற்கு காரணம்?.
- ஆர்எஸ்.சரவணப்பெருமாள்
nadunilai.com