அங்கன்வாடி மையங்களில் குறைபாடுகள் – திமுக அமைச்சர் மீது பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் குற்றச்சாட்டு

BJP News

அங்கன்வாடி மையங்களில் குறைபாடுகள் –  திமுக அமைச்சர் மீது பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன்  குற்றச்சாட்டு

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் நிலைமை குறித்து பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் துறையை முறையாக கவனிக்கவில்லை என்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் சுமார் 54 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 60 முதல் 70 சதவீதம் மையங்கள் அரசு சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன. மீதமுள்ள 30 முதல் 40 சதவீதம் மையங்கள் தனிநபர் இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், வாடகை இடங்களில் பெரும்பாலும் செயல்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பல இடங்களில் மேல்கூரைகள் ஏசி சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலங்களில் கடும் வெப்பம் நிலவும் போது அங்கு வருகை தரும் சிறு குழந்தைகள் அமர்வதற்கே சிரமம் ஏற்படுகிறது. அமைச்சர் சொந்த தொகுதியில் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கூட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகுந்த கவனம் செலுத்தவில்லை. ஆனால் தூத்துக்குடி நகரை சொர்க்கபூமியாக மாற்றியதை  போல் தேர்தல் பரப்புரையில் அவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.  தான் சார்ந்த துறையின் அடிப்படை பணிகளையே சரிவர செய்யாத நிலையில், தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் எப்படி செய்திருப்பார்  என மக்கள் சிந்திக்க வேண்டும். 

மேலும், கிராமப்புறங்களில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டவையாகும். இதில் மாநில அரசின் பங்கு குறித்தும் விளக்கம் தேவை. 

மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து ‘ திமுக அரசு தான் செய்தது போல்  மக்களிடம் தவறான தகவல்களை கொண்டு செல்ல  முயற்சி நடைபெறுகிறது. எனவே, மக்கள் உண்மை நிலையை உணர்ந்து, சிந்தித்து பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.