வெள்ளபாதிப்பு, மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை – தூத்துக்குடியில் பணீந்திரரெட்டிபேட்டி

0
42
collector news

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வருவாய்)விஷ்ணுசந்திரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன், சப்&கலெக்டர் சிம்ரோன்ஜீத் சிங்காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான மழை அளவு குறித்தும், தற்போது பெய்துள்ள மழை அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவர், உள்ளாட்சி நிர்வாகங்கள் கொரோனா தொற்றுக்காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டதுபோல, கூடுதல் மழை பொழிவுகள் ஏற்படும் போது மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்படவேண்டும். பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மீட்பு முகாம்களை அலுவலர்கள் ஆய்வுசெய்து அங்கு பொதுமக்கள் தங்க வைக்க படும்போது, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைவசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திடவேண்டும்.

அதோடு, அந்த முகாம்களில் பொதுமக்களை தங்க வைக்கும்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தை தொடர்ந்து, அவர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள தபால்தந்தி காலனி, தனசேகரன் நகர் பிரையண்ட் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளையும், கோரம்பள்ளம் குளத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்டத்தில் தூத்துக்குடி, காயல்பட்டணம், விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு சீரமைப்புபணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான அளவுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட பணிகள் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் நிறைவுபெறும்.

மாவட்டத்தில், மீண்டும் எந்தவிதமான மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு எல்லாத்துறைகளும் இணைந்து செயல்படுவதற்கு ஆயத்த நிலையில் இருக்கின்றன. பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பத்கு தேவையான இடங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன என்றார்.

இதில், பயிற்சி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)அமுதா, ஆர்.டி.ஓ.க்கள் விஜயா, தனபிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா, அனிதா, மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, பொதுப்பணித்துறை(நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here