தங்கம்மாள்புரத்தில் மழைநீர் தேங்கி கிடக்கும் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்றுகோரி கிராமமக்கள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட தங்கம்மாள்புரத்தில் பொதுமக்களுக்கு தேவையான சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தங்கம்மாள்புரத்திலுள்ள அம்மன் கோவிலுக்கு தெற்கே இருந்து சர்ச் தெரு, தெற்கு தெரு மற்றும் புதுமனைக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.
இதனால், இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்லமுடியாத நிலையில், அந்த சாலையிலுள்ள வீடுகளுக்குள் தேங்கி கிடக்கும் மழைநீர் சென்று சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் பொதுமக்களுக்கான இரண்டு குடிநீர் குழாய்கள் உள்ள நிலையில், அந்த குழாய்களும் தேங்கி கிடக்கும் மழைநீருக்குள் மூழ்கிய நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மழைநீர் தேங்கி நிற்கும் சாலையை சீரமைத்துதரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே இந்த சாலையை சரள்மண் கொட்டி சீரமைப்பதற்கு பதிலாக பெரிய பெரிய கற்கள் மற்றும் கல்குவாரி கழிவுகளை கொட்டி பஞ்சாயத்து தலைவர் சீரமைக்க முயன்றதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தியும் விட்டனர்.
இத்தகையசூழ்நிலையில், மழைநீர் தேங்கி கிடக்கும் இந்த சாலையை சரள்மண் போட்டு முழுமையாக சீரமைத்து தரவேண்டும், இப்பணிகளை துரிதமாக விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
மழைநீர் தேங்கி கிடக்கும் சாலையை துரிதமாக சீரமைத்து தரக்கோரி கிராமமக்கள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.