’’முறையாக சீட்டு ஒதுக்கி தரவில்லை – மிச்சத்தை ஒதுக்கினார்கள்’’ – இது அ.தி.முக மீது பா.ஜ.க கூறும் புகார்

0
64
admk and bjp news

மத்தியிலும் மாநிலத்திலும் சுமூக உறவுள்ள கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது என்று வெளியில் பேசிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே சில மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க – பா.ஜ.க இடையே இருப்பதுதான் அந்த மன வருத்தங்கள்.

அ.தி.மு.க – பா.ஜ.க இடையே தேர்தல் கூட்டணி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ’பெயருக்குத்தான் அது கூட்டணி உறவே தவிர, முறையான இட ஒதுக்கீடுகள் பேச்சு வார்த்தைகள் என எதாவது இருக்கிறதா என்றால் அப்படி ஒன்றுமே இல்லை’ என்கிறார்கள் காவிக்காரர்கள். மேலும், ‘இரட்டை இலையின் தயவு மாநிலங்கள் அவையில் தேவை என்பதால் பா.ஜ.க அவர்களிடம் பெரிய அளவில் மோதமுடியவில்லை அதனால் அடக்கி வாசிக்கிறது. இல்லாவிட்டால் இவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம்’ என்றும் கொதிக்கிறார்கள் அவர்கள்.

’நாடாளுமன்ற தேர்தலின் போதும் கூட்டணி கட்சி என்கிற அளவில் அ.தி.மு.க எங்களுக்கு உதவவில்லை. வெளியில் அப்படி இப்படி என்று பேசிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே காரியத்தில் அ.தி.மு.க கண்ணாக கருத்தாக இருக்கிறது. தற்போது நடக்க இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு நல்ல இடங்களை எடுத்துக் கொண்டு அவர்களால் முடியாத இடங்களை எங்களிடம் தந்துவிட்டார்கள். அதை கூட உட்கார்ந்து பேசி கொடுக்கவில்லை. அவர்கள் முதலில் எடுத்துக் கொண்டு மிச்சம் இதுவெல்லாம் இருக்கிறது. அதில் போட்டியிட்டுக் கொள்ளுங்கள் என விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட சீட்டுதான் தருவார்கள் என்று முதலிலே எங்களுக்கு தெரிந்திருந்தால், அதற்கு தகுந்தாற்போல் மட்டும் ஆட்களை தயார் செய்து வைத்திருப்போம். ஓரளவு அதிகமாக சீட் ஒதுக்குவார்கள் என்று நம்பி பலரும் வேட்பாளர் ஆக தயார் ஆகியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த குறைவான் சீட்டை வைத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதனால் பா.ஜ.க வை சேர்ந்த பலரும் இப்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். அவர்களின் ஆதங்கத்தையும் ஆர்வத்தையும் தடுக்க முடியவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை முறையாக பேசப்படாததே இதற்கு காரணம்’ என்கிறார்கள் பா.ஜ.கவில் சில முக்கியஸ்தர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here