சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட அனிதராதாகிருஷ்ணன் கலெக்டரிடம் கோரிக்கை

0
66
anitharadhakrishnan

தூத்துக்குடி, டிச. 1:

உடன்குடி, சாத்தான்குளம் பகுதி மக்களின் நலன் கருதி சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அனிதராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் டிஎன்டிஏ தொடக்கப்பள்ளி கட்டடத்தை உடன்குடி அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 2.50 லட்சம் செலவில் சீரமைப்பு செய்து தர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும் வீரபாண்டியன்பட்டினம் ரயில்வே கேட் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உடன்குடி அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரபான்டியபட்டினம் ரூரல் ஊராட்சி சண்முகபுரம் கிராமம், மேலபுதுக்குடி ஊராட்சி மேலபுதுக்குடி கிராமம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் ஊராட்சி கருங்காளியம்மன் கோவில் தெரு, தண்டுபத்து ஊராட்சி செட்டிவிளை கிராமம், மணப்பாடு ஊராட்சி புதுக்குடியேற்று கிராமம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சுகந்தலை ஊராட்சியில் வெள்ளக்கோவில் கிராமம் ஆகிய இடங்களில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளை கிராம ஊராட்சியில் மானாடு தண்டுபத்து கிராமத்தில் 6 ஏக்கர் நிலபரப்பில் உள்ள குளத்தை தூர்வாருவதற்கும், வரத்து கால்வாய் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் ஒன்றியம் மேல திருச்செந்தூர் ஊராட்சியில் கிருஷ்ணநகர் கிராமத்தில் வன்னியராஜா கோவில் அருகிலும், திருச்செந்தூர்- நாகர்கோவில் சாலையில் நடு நாலுமூலைக்கிணறு பகுதியிலும் புதிதாக பயணிகள் நிழற்குடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல திருச்செந்தூர் ஊராட்சியில் உள்ள கீழ நடுநாலுமூலைகிணறு பகுதியில் செயல்படும் பிச்சிவிளை கூட்டுறவுசங்கம் நியாயவிலை கடைக்கு புதிதாக சொந்த கட்டம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், தற்போது பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் அதிக அளவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த நீரை வறட்சி பகுதியாக உள்ள உடன் குடி, சாத்தான்குளம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும். இல்லையேல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அவருடன் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், விவசாய அணி ஆஸ்கர், தொண்டரணி வீரபாகு, வர்த்தக அணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here