தூத்துக்குடி, டிச.18:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுபான்மைப் பள்ளிகளில் அரசு விதிமுறைப்படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் 25ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடி சில்வர்புரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ராமசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவன் வரவேற்றார்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிதிஉதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் அரசு விதிமுறைப்படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் 25ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் மிகுந்த கஷ்டப்படுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய மூன்று கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் நியமன ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிடவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஒன்றிய, நகராட்சி பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், சாத்தான்குளம் வட்டார தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ், வட்டார செயலாளர்கள் ஸ்ரீவை மாரிகணேஷ், ஆழ்வை மகேஷ்துரைசிங், கோவில்பட்டி சுரேஷ்குமார், விளாத்திக்குளம் இந்திராணி, தூத்துக்குடி நிர்மல்கோயில்ராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் சாந்தாகுரூஸ் நன்றி கூறினார்.