கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக் : அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

0
96
minister

கோவில்பட்டி,டிச.19:

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஒன்றியம் அய்யனார்ரூத்து, கட்டாலங்குளம், குமரெட்டியாபுரம், கோவில்பட்டி ஒன்றியம் குலசேகரபுரம், விளாத்திகுளம் ஒன்றியம் படர்ந்தபுளி, புதூர் ஒன்றியம் ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்குகளை துவக்கி வைத்தார். மேலும், கட்டாலங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கிராம பகுதிகளிலும் அம்மா மருத்துவ முகாம்களை நடத்தினார்கள். அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகளையும் துவக்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை புதிதாக துவக்கினார்கள். இதன் மூலம் மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளது.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்வியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ததன் பயனாக ஏழை மாணவ, மாணவிகளும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது பகுதியில் உள்ள ஏழை மாணவி சுதா என்பவருக்கும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் கூட சட்டசபையினை ஒத்திவைக்காமல் தொடர்ந்து நடத்திய மாநிலம் நமது மாநிலம். அதைப்போலவே எல்லா மாவட்டங்களுக்கும் கொரோனா ஆய்வுக்கூட்டத்திற்கு சென்ற முதல்வர் நமது முதல்வர்தான். நோயின்றி மக்கள் வாழ வேண்டும் என்பது அம்மா அரசின் நோக்கம் ஆகும். மக்கள் நல்வாழ்வு துறை சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழகம் தொடர்ந்து பெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை துவக்க உத்தரவிட்டு முதற்கட்டமாக 628 மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் நமது மாவட்டத்தில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்கு 9 அம்மா மினி கிளினிக்குகளும், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்திற்கு 9 அம்மா மினி கிளினிக்குகளும் என மொத்தம் 18 கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளது. கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 2 கிளினிக்குகள் ஓட்டப்பிடாரம் பகுதியிலும், 2 கிளினிக்குகள் விளாத்திகுளம் பகுதியிலும், 5 கிளினிக்குகள் கோவில்பட்டி பகுதியிலும் துவக்கப்பட உள்ளது. இன்று காலையில் அய்யானார்ரூத்து, கட்டாலங்குளம், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்கப்படுகிறது.

அய்யனார்ரூத்து பகுதியில் நீண்ட காலமாக ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களை துவக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். தற்போது துவக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகள் பிற்காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி பொதுமக்களுக்கு சிறு சிறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் என 3 நபர்கள் பணியில் இருப்பார்கள். தினசரி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இங்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

இங்கு குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும், சர்க்கரை நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையும், கண் பரிசோதனையும் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் சிறப்பு சேவைகளாக செய்யப்படும். இங்கு சிறிய ஆய்வக வசதியும் செய்யப்படும். இதன் மூலம் கிராம மக்கள் தொலைதூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு உள்;ரிலேயே சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு நிதியின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில் அம்மா நகரும் மினி கிளினிக் சேவை துவக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். நீங்கள் என்றும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், பெருமாள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன், லிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் மாடசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லெனின்குமார், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here