குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.. திடீர் அறிவிப்பு

0
136
kamalkaasan

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வரும் 23ம் தேதி சென்னையில் திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுக்க மாணவர்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு, கை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் திமுக சார்பில் வரும் 23-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அந்த கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். முன்னதாக, தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்த முடிவை அறிவித்தார். இருப்பினும் கட்சி பேதமின்றி மாணவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைத்து தரப்புமே இந்த பேரணியில் பங்கேற்க வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, தனது கட்சியினரும் பேரணியில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதியே நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்து, தாங்கள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் ம.நீ.ம பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் அருணாச்சலம் மற்றும் சவுரி ராஜன் ஆகியோர் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு திரும்பினார்.

அப்போது நிருபர்கள் அவர்களிடம், மக்கள் நீதி மய்யம், இந்த பேரணியில் பங்கேற்குமா என்று கேட்டதற்கு, நேரடியாக, அவர்கள் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக கட்சி சார்பில் அது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து விட்டு சென்றுவிட்டனர். திமுக பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காமல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து விட்டுச் சென்றதால் மக்கள் நீதி மய்யம் தனது முடிவை மாற்றிக் கொண்டதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இரவு 7 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், கமல்ஹாசன், தனது சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால், திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் திருப்பத்தால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here