’’இயேசு பிறப்பு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி’’- தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் அறிக்கை

0
160
csi bishop

’’மிகவும் அன்புக்குரிய நடுநிலை.காம் வாசகர்களே ! ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மீது அன்புகொண்ட கடவுள், பாவத்திலிருந்து நம்மை மீட்டு பரலோக வாழ்வை பரிசாக தரவேண்டும் என்பதற்காக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு என்ற பெயரில் பிறந்தார். காணக்கூடாத கடவுள், இயேசு என்ற பெயரில் பிறந்ததால் நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் பல உண்டு. அவற்றுள் இரண்டினை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1.நம்மை மீட்கப் பிறந்தார்

அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10).

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அனைவருக்கும் பொதுவானது. அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்காகவோ, மொழியினருக்காகவோ, தேசத்தாருக்காகவோ பிறக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களையும் மீட்பதற்காகவே அவனியில் பிறந்தார்.

அவரது பிறப்பின் செய்தி சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மேய்ப்பாளர்களுக்கும் ஆட்சியாளராகிய ஏரோதுவுக்கும், சாஸ்திரிகள் என்று அழைக்கப்படுகின்ற ஞானிகளுக்கும், ஆசாரியன் சிமியோனுக்கும், ஆதரவற்ற அன்னாளுக்கும் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் அவர் எல்லாருக்காகவும் பிறந்தார்.

பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இரண்டு பிரிவுகள் உண்டு. புதிய ஏற்பாட்டின் முதல் நூலாகிய மத்தேயு புத்தகத்தின் தொடக்கத்தில் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு இடம்பெற்றுள்ளது. அவ்வம்ச வரலாறில் மோவாபியப் பெண்ணாகிய ரூத், கானானியப் பெண்ணாகிய ராகாப், ஏத்தியப் பெண்ணாகிய பத்சேபாள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். இயேசு கிறிஸ்து அனைவருக்கும் பொதுவானவர் என்பதற்கு இதுவும் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

ஆகவே அன்புக்குரியவர்களே!

இயேசு கிறிஸ்து இஸ்ரவேலர்களுக்காகவோ, கிறிஸ்தவர்களுக்காகவோ மட்டும் பிறந்தவரல்லர். உங்களுக்காகவும் பிறந்தவர் இந்திய நாட்டு மக்களாகிய நம் அனைவருக்காகவும் பிறந்தவர். தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்காகவும் பிறந்தவர். கிறிஸ்து பிறப்புப் பண்டிகையைக் கொண்டாடுகின்ற இந்நாளிலே அவரை உங்களுடைய ஆண்டவராக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் அருளும் மீட்பை நீங்கள் இலவசமாகப் பெறலாம். கடவுளுடைய பிள்ளைகளாக மாறலாம்.

2.நம்மைக் காக்கப் பிறந்தார்

அவருக்கு இம்மானுவேல் என்று போராடுவார்கள் என்று சொன்னார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்தேயு 1:23)

இயற்கை சீற்றங்கள், யுத்தங்கள், விபத்துக்கள் போன்ற ஆபத்துகள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். எனினும், நாம் பயப்பட வேண்டாம். ஏனெனில், எல்லா பயங்களிலும், ஆபத்துகளிலுமிருந்து நம்மை விடுவிக்கவும், பாதுகாக்கவும், நம்மைப் படைத்த கடவுளே பூமியில் பிறந்துள்ளார். அதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவேதான், இயேசு கிறிஸ்துக்கு வழங்கப்பட்ட பெயர்களிலே ஒன்று இம்மானுவேல் என்பதாகும். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று பொருளாகும். இம்மானுவேலராக இவ்வுலகில் பிறந்த கடவுள் நம்மோடு இருக்க வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அவரை நமது உள்ளங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் (வெளி. 3:20) என்று, அவர் நமது இதயத்தின் வாசலிலே நின்று இதயக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.

நமது இதயத்தைத் திறந்து அவருக்கு இடம் கொடுத்தால் அவர் நமது இதயத்தில் வாசம்பண்ணுவார், நமது இல்லத்திலும் வாசம்பண்ணுவார் நம்மோடுகூட இருந்து, நம்மை அற்புதமாகப் பாதுகாப்பார். எல்லாத் தீங்குகளுக்கும், பொல்லாங்குகளுக்கும் விலக்கி நம்மைப் பாதுகாப்பார்.

ஆண்டவர்தாமே அப்படிப்பட்ட கிருபைகளைத் தந்து, இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அருள்புரிவாராக’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here