தட்டார்மடம்,ஜன.07:
தட்டார்மடம் அருகே தலைமைக் காவலரை தாக்கியதாக நில புரோக்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், அழகம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பொன்னம்பல நாதன் (45). முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரவியராஜ் (47). இருவரும் நில புரோக்கர்கள். ஒரு நிலத்தை பேசி முடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திரவியராஜ்-க்கு சொந்தமான காரின் சாவியை பொன்னம்பல நாதன் பறித்துக் கொண்டாராம். இதுகுறித்து திரவியராஜ் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக தலைமைக் காவலர் கார்த்திக் அருணாசலம், காவலர் ராஜேஸ் ஆகிய இருவரும் பொன்னம்பலநாதனை தேடி அழம்மாள்புரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் போலீசாரிடம் தகராறு செய்து, கார் சாவியை தரமறுத்ததோடு தலைமைக் காவலரை கார் சாவியால் தாக்கினாராம். இதில் தலைமைக் காவலரின் வலது கண்ணத்தில் காயம் ஏற்ப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னம்பல நாதனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.