சாத்தான்குளம், ஜன. 7:
சாத்தான்குளம் அருகே அங்கன்வாடி மையம் அருகில் அபாய நிலையில் காணப்பட்ட மின் கம்பம் திடீரென அடியோடு சரிந்து விழுந்தது. அப்போது ஆள்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் யாரும் காயமின்றி தப்பினர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழியில் 500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் சேவை மையங்கள் உள்ளன. இதன் அருகில் உள்ள சிமெண்ட் காங்கிரிட் மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்தும், துறு பிடித்த கம்பிகள் ஆபத்தான நிலையிலும் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். ஆனாலும் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படாமல் இருந்து வந்தது.இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் அந்த மின்கம்பம் திடீரென அடியோடு சரிந்து விழுந்தது.அப்பொழுது அங்கு யாரும் அங்கு இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதனைபழுது பார்த்தபின்மின்சாரம் சீரானது. இதேபோல சேதமடைந்த மின்கம்பம் களை அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம்அமைக்க வேண்டும் என தாமரை மொழி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.