எதோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்.. சென்றோம்.. என்றில்லாமல் சமூகத்தின் மீது அக்கறை கொள்பவர் ஈடுபாடுள்ள பக்தர் ஆவார். ஆன்மிகம் என்கிற அஸ்திவாரமே அதற்கு காரணம். ஆன்மிகவாதிகள்தான் ஒரு நிலையில் இருந்து, இந்த சமூகம் வேறு விதமாக பயணிப்பதை பார்க்கிறார்கள். எனவே எதாவது செய்ய வேண்டுமே என்கிற அக்கறை அவர்களுக்குள் உதிக்கிறது. இந்திய கலாசாரம் எல்லோருக்கும் நன்மை கிடைப்பது குறித்தே விவாதிக்கிறது. இந்திய ஆன்மிக அஸ்திவாரமும் அதுதான்.
அனைத்தையும் செயல்படுத்துவது வழிநடத்தும் அரசிடம் இருக்கிறது. வழிநடத்தும் அரசு, அரசியல் என்கிற போட்டியால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த அரசியல் போட்டியில் மதம் என்கிற மாச்சர்யமும் கலக்கிறபோது, அரசியல் என்பது வீர விளையாட்டாகி தேர்தல் களம் என்பது அசாதாரணம் ஆகிறது.
எல்லோருக்கும் நன்மை என்பதை மட்டும் யோசிக்கும் இந்திய கலாசரம், இங்கே திணறவேண்டியதாகி விட்டது. அனைவரையும் சமமாக பார்க்கும் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன் என ரஜினி சொன்னார். ஆன்மிகம் என்றாலே குறிப்பிட்ட மதம் சார்ந்தது என புரியப்பட்ட இந்த தருனத்தில் அதுவும் விவாதமாகிப்போனது. குறிப்பிட்ட மத விரும்பிகள், குறிப்பிட்ட மத வெறுப்பாளர்கள் ரஜினியின் அரசியலை ஆதரிக்க வில்லை. தனக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மூலம் அப்படி இப்படியென்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இவர்களின் எதிர்ப்பு, ஆன்மிக அரசியலை ஆதரிப்போரை அதிகப்படுத்தியது. ஆனால் அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தேர்தல் நேரத்தில்தான் அதற்கான ரிசல்ட்யை பார்த்திருக்க முடியும். இந்தநிலையில் ரஜினியின் கட்சி யாருடன் கூட்டணி என்கிற விவாதமும், அப்படி கூட்டணி அமைத்தால் என்னாகும்? என்றும், கூட்டணி அமைக்காமல் தனியாக போட்டியிட்டால் என்னாகும்? யாருக்கு சாதகமாக, யாருக்கு பாதக அமையும்? என்பதெல்லாம் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் சினிமா சூட்டிங்கில் இருந்த ரஜினி, உடல்நலக் குறைவு காரணமாக, அரசியல் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ரஜினிக்கு எதிராக ஆர்ப்பரித்த எதிர்ப்பு அலைகள் அப்படியே அமைதியானதோடு ஆதரவாகவும் ஆனது. அதாவது ரஜினி கட்சி தொடங்காமல் போனதை சில கட்சிகள் ஆதரித்தன. ஆனாலும் அவரது ரசிகர்கள் விடவில்லை. வா தலைவா வா என்கிற கோஷம் எழுப்பினர். அதை வலியுறுத்த ஒன்று கூடுவோம் என்றார்கள். இதனை அறிந்த ரஜினி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேண்டவே வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவர் பேச்சை கேட்காமல் சென்னையில் நேற்று 10.01.2021 கூடி பாசப்போராட்டம் நடத்திவிட்டனர்.
இந்த நிலையில் இன்று ரஜினி சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், ’’என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு..நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்த்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமை வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்காக காரணங்களை ஏற்கனவே விரிவாக்க விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சமூக அக்கறையுள்ளவர். அவர் அரசியல் மூலம் நல்ல நிர்வாகத்தை உருவாக்க ஆசைப்பட்டதும் உண்மைதான். ரஜினி மக்கள் மன்றம் அப்படியே புதிய கட்சியாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருந்ததும் உண்மை. ஆனால் ரஜினியின் உடல்நிலை, அரசியல்நிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையே!. அதனால் அவர் ஒதுங்கியிருக்கிறார். இந்தநிலையில் ரசிகர்களின் ஆர்வமான அழைப்பு, அவரை வேதனையடைய செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. இதற்கு பதிலாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்னும் ஏராளமான மக்களுக்கு நன்மைகள் செய்து, தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்கினால் ரசிகள் நினைப்பது நடக்கலாம்.