தூத்துக்குடி,ஜன.13:
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடிடவேண்டுமென தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளார் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடிடவேண்டுமென தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளுக்கேற்ப தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டுகளில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சமத்துவ பொங்கல் வைத்தும், கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், பாடல்களை ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு வழங்கியும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை-, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.