கோவில்பட்டி,ஜன.28:
கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் வெகு விமர்சையாக தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. 10ம் திருநாளான இன்று காலை கோவில் நடைதிறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி சட்ட ரதத்திலும், கோ ரதத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளலைத் தொடர்ந்து தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு இடையே திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தைப்பூச திருத்தேரோட்டத்தினை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.