இலங்கை கடற்படை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை – மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை

0
117
collector news

தூத்துக்குடி, பிப்.5:

இந்திய மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படை மீது மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாதம்தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 15 மாதத்திற்கு பிறகு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து மீனவர்களின் குறைகளை முழுமையாக கேட்டறிந்தார். கூட்டத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், தருவைகுளம் மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் வெள்ளப்பட்டி, புன்னக்காயல், பெரியதாழை, அமலி நகர் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களை சார்ந்த ஊர் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளிலுள்ள பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில், பங்கேற்ற தருவைகுளம் ஊர் தலைவர் மகாராஜன் மீன் பிடி கிராமமான எங்கள் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 800மாணவர்கள் படித்து வருகின்றனர். அதிகளவில் மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் கூடுதல் கட்டிட வசதி, பள்ளிக்கென்று தூய்மைப் பணியாளர் மற்றும் காவலாளி இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி இதனை நிவர்த்தி செய்து கொடுத்திட வேண்டும்.

மேலும், தருவைகுளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 3 விசைபடகுகள் மீன் பிடி தொழில் செய்வதற்கான அனுமதியை தாமதமின்றி உடனடியாக வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவேண்டும் என்றார். வெள்ளப்பட்டி தருவைகுளம் தாம்போதியில் வாகனங்கள் தடையின்றி சென்று வர ஏதுவாக பாலம் அமைக்கவேண்டும், வெள்ளப்பட்டி திரேஸ்புரம் தார் சாலை, மற்றும் மண்புழு உர ஆலை அமைத்திடவும் நீலப்புரட்சி திட்த்தில் 67 பேருக்கு பட்டா வழங்கிடவும் மீனவ மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, செந்தில்ராஜ் கூறியதாவது, மீன்பிடி துறைமுகம், மற்றும் மீனவ கிராமங்களில் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தருவைகுளம் பள்ளிக்கு பணியாளர்கள் நியமனம் மற்றும் கூடுதல் கட்டிட வசதி செய்து கொடுக்கப்படும். தருவைகுளத்தில் 3விசைப்படகுகள் தொழில் செய்ய சுமூகமான முறையில் பேசி விரைவில் நல்ல தீர்வு காணப்படும், வெள்ளபட்டியில் 67 பேருக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும், மீனவர்களுக்கு கேசிசி அட்டை வழங்க முயற்சி மேற்கொள்ளபடும், பெரியதாழை, அமலி நகரில் சாலை வசதிகள் செய்யபடும் என்றார்.

கூட்டத்தில், மீன் துறை உதவி இயக்குனர்கள் விஜயராஜன், ஆன்ட்ரோபிரின்ஸி வயலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here