மதுரை, பிப்.10:
தெற்காசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என தவறான தகவல்கள் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகம் குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
”தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 வகுப்பு மற்றும் கல்லூரி பாட புத்தகத்தில் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக தவறான தகவலை தமிழக அரசின் பள்ளி, கல்லூரி பாட புத்தகங்கள் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானவை ஆகும் . தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் நமது தேசம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே மேலும் யுனெஸ்கோவின் முத்திரையை போலியாக உற்பத்தி செய்து வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போலியான விருதை 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தத் தகவலானது திட்டமிட்டு வேண்டுமென்றே பாடபுத்தகத்தில் பொய்யான தகவல் சேர்க்கப்பட்டுள்ளது . மாணவர்கள் தவறான பொய்யான தெளிவற்ற விசயங்களை கற்கும் போது தவறான புரிதலும் மற்றும் எதிர்காலம் கேள்விக் குரியதாகின்றது. ஆகையால் ஒன்பதாம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டத்திலும் கல்லூரி பாடத் திட்டத்திலும் பெரியார் குறித்து உள்ள தவறான தகவல்களை நீக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகம் குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.