தூத்துக்குடி அருகே ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

0
25
edappadi admk

தூத்துக்குடி,பிப்.17:

தூத்துக்குடி அருகே ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை வருகிறது என்று தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டத்தில், அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மண்டல பொறுப்பாளருமான நத்தம்விஸ்வநாதன் ஆகியோர் பேசினர்.

இதில், அமைப்புச்செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், சின்னப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், மாவட்ட இணைச்செயலாளர் செரீனாபாக்கியராஜ், துணைச்செயலாளர் சந்தானம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, துணைத்தலைவர் செல்வக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன் மோசஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘’புரட்சித்தலைவரை திமுகவினர் சட்டமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். சட்டமன்றத்தைவிட்டு வெளியில் வந்த புரட்சித்தலைவர், ‘இனி நான் சட்டமன்றத்துக்குள் வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். அவர் சொன்னபடியே முதலமைச்சராகத்தான் மீண்டும் சட்டமன்றத்துக்குள் சென்றார். அதுபோல் புரட்சித் தலைவையை சட்டமன்றத்துக்குள் தாக்கினார்கள். அதற்கு பிறகு மக்கள் ஆதரவோடு அவர் முதல்வரானார். இதெயெல்லாம் திமுகவினர்தான் நிகழ்த்தினார்கள். இப்படிப்பட்டவர்களை நம்பி நாட்டை மக்கள் எப்படி ஒப்படைப்பார்கள். வேணுமென்றே எதிர்கட்சித் தலைவர் நம்முடைய ஆட்சியை குறை கூறி வருகிறார்.

நாம் செய்கிற எந்த நல்லத்திட்டத்தையும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நம்மை ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் சொல்லி வருகிறார். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

அம்மாவின் அரசும், மத்திய பாஜக அரசும் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறது நம்முடைய அரசு. எரிவாயு திட்டத்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. புதிய தொழில் வாய்ப்பிற்காக தூத்துக்குடி அருகே அல்லிகுளம் என்ற இடத்தில் ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை வருகிறது. அதன் மூலம் நேரடியாக 5 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் மறைமுகமாக 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அப்படித்தான் மக்கள் நலனில் அக்கறையோடு இந்த அரசு திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் உங்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்து இன்னும் பல பல திட்டங்களை கொண்டு வரும். அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here