நாம் அதிகாரத்துக்கு வரவேண்டும் – ஓட்டப்பிடாரத்தில் ஷ்யாம் கிருஷ்ணசாமி பேச்சு

0
29
dr.krishnasamy

தூத்துக்குடி,பிப்.18:-

நாம் அதிகாரத்துக்கு வந்து எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என டாக்டர்கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரத்தில் பேசினார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட ரீதியாக அரசியல் மாநாடுகளை நடத்திவருகிறார் அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகத்தின் அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம், “தேவேந்திர குலத்தின் அரசியல் இந்த மண்ணில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. இந்த சமுதாயம் நினைத்தால் யார் துணையும் இல்லாமல் ஒருவரை சட்டமன்றம் அனுப்பலாம் என்பதை நிரூபித்த மண் இந்த மண். ஒருத்தர் விடியலைத் தருகிறேன் என்று சொல்லி வருகிறார். அவர் அப்பா ஐந்து முறை ஆண்டபோது விடியல் வரவில்லையா? இன்னொருத்தர் வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொல்லி வருகிறார். யார் வெற்றி நடைபோடுகிறார்கள்? யார் வளர்ந்திருக்கிறார்கள்?”

“நாம் எப்போதும் கோரிக்கை வைக்கும் இடத்திலேயே இருக்கக் கூடாது. நாம் அதிகாரத்துக்கு வந்து எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும். தலைவர் இருமுறை இந்த சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிறார். அரசியல் அதிகாரம் சாதாரணமாக வந்துவிடாது. யாரும் நம் கையில் தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். இதையெல்லாம் உணர்ந்து புதிய தமிழகத்தின் கொள்கையை உணர்ந்து இளைஞர்கள் திரள வேண்டும்.

புதிய தமிழகம் மீண்டும் ஓட்டப்பிடாரத்தில் வரலாறு படைக்க வேண்டும். 96 வெற்றி மீண்டும் திரும்ப வேண்டும். நமது சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்து நமக்காக வேலை செய்தால் பிற சமுதாயத்தினரும் நமக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்” என்று பேசினார். எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடாத பட்சத்தில், அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி வேட்பாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

1996 இல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி 27 விழுக்காடு வாக்குகள் வாங்கி பெரும் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் கொடியன்குளம் பிரச்சனையை முன்னிறுத்தி சுயேச்சையாக நின்று வென்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதே ஓட்டப்பிடாரத்தில் வென்றார். இந்தப் பின்னணியில் நேற்று நடந்த மாநாட்டில் ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் புதிய தமிழகம் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் வலுவாக தென்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here