அரசு கட்டிடத்தில் சீன தத்துவவார்த்தைகள் – தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் அவலம்

0
194
news

உலகிற்கே ஞானத்தை வாரி வழங்கியது இந்த பாரத தேசம். சுமார் முப்பது ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து இங்குள்ள ஞானத்தையும் யோகத்தையும் மற்றும் பல கலைகளையும் திரட்டிச்சென்றார் சீன பயணி யுவாங் சுவாங். தற்பெருமை பேசாத நம் கலாச்சாரம் எதையும் வெளியுலகத்திற்கு விளம்பரம் செய்ய வில்லை. ஞானத்திற்காகவும், பொருளுக்காகவும் இந்தியாவை தேடி வந்தவர்கள் அந்நிய தேசத்தார்.

உலக வாழ்க்கைக்கே தத்துவங்களை சொன்ன ஞானிகள் பிறந்த மண் இந்த இந்திய மண். எண்ணிலடங்கா ஞானிகளும் யோகிகளும் தத்துவங்களை பறைச்சாற்றியிருக்கிறார்கள். இந்தியாவை ஒரு ஞான தேசம் என்றே உலகம் பார்க்கிறது. இதெல்லாம்விட யோகத்தையும் போகத்தையும் இந்தியாவிலிருந்து பெற்றது சீனா. அதற்காக சீனாவில் உள்ள அத்துனை அறிவு சார்ந்த விசயங்களும் இந்தியாவிலிருந்து சென்றது என சொல்லவில்லை.

அப்படி என்னதான் மிக உச்சியில் இருந்தாலும் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை பார்க்க முடியாத அளவிற்கு இடையில் நீண்ட காலம் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவிட்டனர் இந்தியர்கள். யானைக்கு தன்னுடைய பலம் தெரியாது என்பதுப்போல் இந்தியனுக்கு அவன் பலம் அவனுக்கே தெரிவதில்லை. வெளியிலிருந்து வந்தவர்கள் நம்மை அடிமையாக்கினார்கள். அவர்கள் சென்ற பிறகும் நம்மில் பலர் அடிமையாகவே வாழ்கிறார்கள்.

அதனால்தான் தத்துவ ஊற்றே இங்கு இருந்தும் அந்நிய தேசத்து தத்துவ வார்த்தையை அடையாளம் காட்டி பெருமைபடுகிறோம். அப்படித்தான் பார்க்கமுடிகிறது தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தில்எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை பார்க்கும்போது.

(ஒரு ஏழைக்கு ஒரு மீனை கொடுப்பதன் மூலம் தற்போதைய அவனுடைய பசியை தீர்த்துவிட முடியும். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதன் மூலம் அவனை ஒரு சிறிய / நுண் தொழிலதிபர் ஆக்க முடியும். மேலும் இதன் மூலம் அவன் ஏழ்மை நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிடும். – ஒரு சீன பழமொழி
அதனால் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்குகிறோம்) இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

பிழைக்க வைப்பதைவிட பிழைப்பிற்கான வழியை காட்டுவதே சிறந்தது என்கிற இந்த தத்துவம் சீனாவிலிருந்துதான் வரவேண்டுமா? இதுபோன்ற தத்துவம் இங்கே சொல்ல படவே இல்லையா? கோடிக்கணக்கில் அரசு பணத்தில் கட்டியிருக்கும் கட்டிடத்தில் இதுபோன்று தமிழர்கள் சொல்லியிருக்கும் தந்துவத்தை எழுதியிருக்கலாம்.

இப்படி சொன்னவுடன் சிலருக்கு கோபம் வந்துவிடும், கருத்தை யார் சொன்னால் என்ன அந்த கருத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்பார்கள். இதை கூட திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அறிவியலும், கலையும், தத்துவங்களும், எல்லையில்லாமல் விரிய கூடியதே. அதை மறுக்கவில்லை. ஒரு இடத்தில் ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால் அந்த பொருளை வேறு இடத்திலிருந்து கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால் இங்கே குவியல் குவியலாக கொட்டிக் கிடக்கும்போது எதற்காக அந்நிய தேசத்துக்கு போகவேண்டும் என்பதே கேள்வி?

எனவே இதுபோன்ற தவறுகள் அவ்வப்போது தவிர்க்கும் போதுதான் எந்த இடத்திலும் தவறே நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். நம்மூர் பாரதியார், திருவள்ளுவர் சொல்லாத கருத்துக்கள் வேறு எதேனும் இருக்கிறதா? உண்மையில் சொந்த தேசத்தை மதிப்பதாக இருந்தால் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் அங்கு எழுதி வைத்திருக்கும் அந்த போர்டை அகற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here