ஊரடங்கால் வியாபாரமும் இல்லை.. விலையும் இல்லை.. வாழக்காய்கள் பழுத்து அழுகுகிறது.. வாழைதோட்ட விவசாயிகள் கவலை..

0
14
banana news

சாயர்புரம், ஜுன் 06-

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பேய்க்குளம் பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் நெல் விவசாயம் நடந்தது வருகிறது. வாழை உற்பத்தியை பொருத்தமட்டில் இங்கு கதலி, மலைஏத்தன், மற்றும் ரசகதலி உள்ளிட்ட ரகங்கள் இங்கு ஏராளமாக பயிரிடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் அவ்வாறே பயிரிடப்பட்டிருக்கிறது. பொதுவாக இப்பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாழைத்தார் அறுவடை தொடங்குவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் வாழைத்தார் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கபடும் வாழைத்தார்கள் சென்னை மற்றும் அண்டை மாநிலங்காளன கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். விவசாயத்தை பாதிக்க கூடிய அதிக காற்று, புயல் மழை, வேலையாட்கள் பற்றாக்குறை, உரத் தட்டுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை தாண்டி வருடம் முழுவதும் பாடுபட்டு வாழைகளை பக்குவமாக வளர்த்து விற்பனை செய்து விவசாயிகள் தங்களுக்கான லாபத்தை இந்த நேரத்தில்தான் பெற முடியும்.

ஆனால் இந்த நேரத்தில்தான் விவசாயிகளுக்கு ஏற்படும் மற்றோர் பிரச்சனை உற்பத்தி செய்த வாழைத்தார்களுக்கு தகுந்த விலை கிடைக்குமா என்பதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு என்ற உத்தியையே கையாண்டு வருகின்றன. இதே போல் இந்தியாவிலும் கடந்து ஆண்டு ஏப்பரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டது. அந்த நேரத்தில் விவசாயிகள் விளைவித்த வாழைத்தார்களை விற்பனை செய்ய கடைகள் இல்லாத காரணத்தினால் விலை வீழ்ச்சியை சந்தித்து கடுமையான நஷ்டத்தை எதிர் கொண்டனர்.

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. லாக் டவுன் மற்றம் விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் வாழைத்தார்கள் தோட்டத்திலேயே பழுத்து அழுகி வருகின்றன. இதனால் இப் பகுதி வாழை விவசாயிகள் கடந்த ஆண்டைப்போல் மீண்டும் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேய்க்குளம் பாசன பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயி மகேந்திரன், ’’கொரோனா பரவலால் போடப்பட்டுள்ள லாக் டவுன் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்த ஆண்டு லாக் டவுனின் ஏற்பட்ட நஷ்டத்தினால் வங்கிகளிலும், தனியாரிடமும் நாங்கள் வாங்கிய கடனை இன்னமும் அடைக்க முடியாமல் உள்ளோம். இந்நிலையில் இந்த ஆண்டு அதே நிலை தொடர்வதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே லாக் டவுனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here