ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவதை கைவிட வேண்டும்: முதல்வருக்கு பன்னீர்செல்வம் கோரிக்கை

0
221
ops

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை கிண்டியில் கிங் வளாகத்திற்கு மாற்றுவதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதல்வர் அதனை கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள கட்டடம், சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதால், புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து சட்டசபையும், தலைமைச் செயலகமும் இயங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகை செய்தார்.

மேலும், அந்த இடத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வண்ணம், புதுடில்லியில் உள்ள ‛எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. கோவிட் காலக்கட்டத்தில், இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு, நல்ல சிகிச்சைபெற்று, குணமடைந்து வீடு திரும்பினர்.

இச்சூழலில், தற்போது கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து, சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டசபையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மகிவும் வருத்தத்தை அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது.

அதிமுக.,வை பொறுத்தவரையில், கிண்டியில் உள்ள கிங் வளாகத்தில் புதிதாக பல்நோக்கு மருத்துவமனை உருவாக்குவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஓமந்தூரார் மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்திற்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, மருத்துவமனை மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here