நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு

0
419
tamil nadu news neet

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 10) உத்தரவிட்டுள்ளார்கள்:

  1. நீதிபதி ஏ.கே.ராஜன் (ஓய்வு) – தலைவர்
  2. டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் – உறுப்பினர்
  3. டாக்டர் ஜவஹர் நேசன் – உறுப்பினர்
  4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – உறுப்பினர்
  5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை – உறுப்பினர்
  6. அரசு செயலாளர், சட்டத் துறை – உறுப்பினர்
  7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – உறுப்பினர்
  8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் – உறுப்பினர்
  9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு – உறுப்பினர் / செயலர் / ஒருங்கிணைப்பாளர்

இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழகத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here