இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 95% மரணத்தை தடுக்கலாம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

0
29
imr

புதுடில்லி: கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டு டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கோவிட் தடுப்பூசி செயல்திறன்’ என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் ஜூன் 21 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. அதில், தமிழக காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆவணப்படுத்தியிருக்கிறது. இதன்படி தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத தமிழக போலீசார் குறித்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் – என்ஐஇ இயக்குனர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் கூறுகையில், ‛ஒன்று, இரண்டு டோஸ் மற்றும் தடுப்பூசி போடாத காவல்துறையினரிடையே கோவிட் வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புகளை மதிப்பிடுவதற்கு இந்த தரவு பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் காவல்துறையில் 1,17,524 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பிப்ரவரி 1 முதல் மே 14 வரை 32,792 போலீசார் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றனர். 67,673 பேர் 2வது டோஸைப் பெற்றனர். 17,059 பேர் எந்த தடுப்பூசியையும் பெறவில்லை.

இந்த போலீசாரிடையே ஏப்ரல் 13, 2021 முதல் 2021 மே 14 வரை 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இறந்த 31 பேரில், நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். 7 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் மீதமுள்ள 20 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். இந்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன,’ எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here