கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து பனிமய அன்னையை வணங்கி செல்ல வேண்டும் – ஆயர்

0
8
panimaya matha

தூத்துக்குடி,ஜூலை22:

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திருவிழா இந்தாண்டு மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் வணங்கி செல்ல வேண்டும் என்றும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கேட்டுக் கொண்டார்.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 439வது ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி மாதா சொரூப பவனியுடன் நிறைவு பெறுகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பெரிய அளவிலான திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசியதாவது : நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்ளும் பனிமய மாதா ஆலய திருவிழா கொரோனா பரவல் காரணமாக மக்கள் பங்கேற்பு இன்றி நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கத்தோலிக்க தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கூறுகையில், பனிமய மாதா ஆலய திருவிழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கால் இந்தாண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான கொடி பவனி, நற்கருணை பவனி மற்றும் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பொருட்காட்சி போன்றவைகள் இந்தாண்டு நடைபெறாது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலை, மாலை நேரங்களில் ஆராதனைகள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் ஆலயம் திறந்திருக்கும். அப்போது பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து ஆலயத்திலிருந்து பனிமய அன்னையை வணங்கி செல்லலாம்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன் -லைன் மற்றும் தொலைகாட்சி மூலமாக ஒலிபரப்பபடும் என்றார்.

முன்னதாக கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட எஸ்.பி ஜெயகுமார், பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார்ராஜா, ஆலய கமிட்டி துணைத்தலைவர் அட்லி,செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜார்ஜ், இணைச் செயலாளர் மேவிச் அம்மாள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here