தூத்துக்குடி- நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை – சபைக்குள்ளே எழுகிறது எதிர்ப்பு.!

0
253
emi news

தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல தேர்தல் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கி பல்வேறு கட்டமாக அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. திருமண்டலத்தில் உள்ள 110 சேகரங்கள், 533 தேவாலயங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 2 லட்சம் பேர் வாக்களிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக தேர்தல் பணிகள் தட புடலாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் தேர்தல் பணியில் வாக்காளர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட முறைகேடு நடந்திருக்கிறது என்று கூறி அதே சபையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது குரல் எழுப்பி தர்ணா நடத்தி வருவதையும் பார்க்கிறோம். தற்போது அந்த தேர்தலை நடத்தவே கூடாது என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. கொரோனா தொற்று பரவும் அபாயம், ஊரடங்கு, சுதந்திரதினத்தன்று தேர்தல் நடத்துவதா என்பது போன்ற கேள்விகளை கேட்டும், மனுக்கள் மூலமும் தேர்தலுக்கு எதிராக முறையிட்டு வருகிறார்கள் சபையில் சிலர்.

அதே சபையை சேர்ந்தவரும் சமூக சேவகியும், திரைப்பட நடிகையுமான எமி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மனுக்களை கொடுத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார், ’’தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் சுதந்திர தினத்தன்று நடப்பது சரியானதல்ல. கிறிஸ்தவமக்களான நாங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடக் கூடாதா? பல நாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் இந்த தேர்தலுக்காக சுமார் 2 லட்சம்பேர் வருவார்கள். கொரோனா உச்சத்தில் இருக்கும் கேரளாவிலிருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வருவார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தாண்டி தேர்தல் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் கூடும் சூழ்நிலை ஏற்படும்.

ஒரு வாக்காளர் பல ஓட்டுக்கள் போட வேண்டியது இருக்கிறது. அதனால் அங்கே பல மணி நேரம் ஆகும். ஊரடங்கும் இருக்கும் இந்த காலத்தில் இந்த தேர்தல் தேவையா? அதுமட்டுமல்ல தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. இந்த திருமண்டலத்தில் ரவடியிசமும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ரவுடித்தனம் செய்பவர்கள் அவர்கள் விரும்பியவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், மற்றவர்களுக்கு ஓட்டுப்போட உரிமை இல்லாதபடி செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு திருமண்டலம் கெட்டுப்போய் கிடக்கிறது.

திருமண்டலத்தை பற்றி குறை சொல்பவர்கள் திருமண்டலத்திலிருந்தே நீக்கப்படுகிறார்கள். இங்கே பாலியல் வன்முறை, ஒரினச்சேர்க்கை என்பது போன்ற குறைபாடுகள் நிறைய இருக்கிறது. ஒரு பேராசிரியர் பணியிடத்திற்கு தகுதியான பெண் ஒருவர் நீக்கப்பட்டு, குற்ற வழக்கில் உள்ளவர் ரூ.50லட்சம் கொடுத்து அந்த பேராசிரியர் பணியிடத்தை பெற்றுள்ளார்.

இதனையெல்லாம் யாரும் கேட்க முடியாது என்ற நிலையில் தான் இருக்கிறது. திருமண்டல பேராயரை யாராலும் பார்க்க முடியாத நிலை தான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரைக் கூட யார் வேண்டுமானாலும் பார்த்து மனு கொடுத்து விடலாம், ஆனால் குறுநில மன்னர் போல செயல்படும் பேராயரை யாராலும் பார்க்க முடியாது. இவ்வளவு பிரச்சனைகள் நிறைந்துள்ள திருமண்டல தேர்தலை ரத்து செய்யவேண்டுமென நான் கலெக்டரிடம் கேட்டுக் கொண்டு மனு கொடுத்துள்ளேன்.

அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதேபோல் சட்ட ஒழுங்கு பிரச்னை கருதி மாவட்ட எஸ்.பி.யிடமும் இதேபோன்று மனு கொடுத்துள்ளேன், அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.

கொரோனா பரவல் உள்ள நிலையில் இந்த திருமண்டல தேர்தலை நடத்தாமல் ரத்து செய்யவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இதுமட்டுமில்லை இதேபோன்ற மனுவை அரசு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன். தேர்தலை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இதேபோல், தூத்துக்குடி திரவியபுரம்,சண்முகபுரம், தங்கம்மாள்புரம்,நாசரேத் உள்ளிட்ட பல்வேறு சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஜெபக்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ’’தூத்துக்குடி வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்குகிறது. தற்போது தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்று கருதுகிறோம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி அதுவும் சுதந்திர தினத்தன்று 530க்கும் மேற்பட்ட திருச்சபைகளிலும் தேர்தல் நடைபெறும் போது அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் மதுரை திருமண்டலத்தில் கடந்த ஜூலை 25ம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டபோது மதுரை வருவாய் கோட்டாசியர்கள் பொது ஊரடங்கு முடியும் வரை தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் என்றும், மீறி தேர்தலை நடத்தினால் பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை திருமண்டல தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலையும் கொரோனா பொது ஊரடங்கு முடியும்வரை ஒத்தி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here