தேசிய கொடி குறியீடு மற்றும் நிறுவுவதற்கான சட்டங்கள்

0
58
national

புதுடில்லி: நம் தேசிய கொடி பல காலகட்டங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. இன்று நாம் காணும் தேசிய கொடி 1947 ம் வருடம் ஜூலை 22ம் தேதி நடந்த அரசியல் அமைப்பு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

முதன் முதலில் தேசிய கொடியானது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டது. அது 1906ம் ஆண்டு ஆக., 7 ல் கோல்கட்டாவிலுள்ள பார்சி பாகன் சதுகத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் 1921 ம் ஆண்டு சுதந்திர போரட்ட வீரர் பிங்காலி வெங்கையா மகாத்மா காந்தியை சந்தித்து இரண்டு சிவப்பு பட்டைகள் மற்றும் ஒரு பச்சை பட்டையுடன் கூடிய கொடியாக மாற்றும் படி யோசனை கூறினார். அதன் பின்னரும் பல மாற்றங்களை சந்தித்த தேசிய கொடி 1931 ம் ஆண்டு கராச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கூட்டத்தில் தற்போதுள்ள மூவண்ண கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

தேசிய கொடிக்கான சட்டம் 1950 மற்றும் 1970 ம் வருடங்களில் கொண்டு வரப்பட்டது. இதன் படி தேசிய கொடியை யார் பறக்க விடலாம் மற்றும் கொடிக்கான மரியாதை போன்றவை கண்காணிக்கப்பட்டு வந்தது. 1971ம் வருடம் கொண்டு வரப்பட்ட தேசிய மரியாதை சட்டத்தின் படி தேசிய சின்னங்கள் தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய வரைபடம் போன்றவற்றிற்கு பொது இடங்களில் தகுந்த மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மீறுவோர்க்கு மூன்று வருட சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தகுந்த காரணங்கள் இல்லாமல் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதும் குற்றமாக கருதப்பட்டது. மேலும் தேசிய கொடியினை கைக்குட்டைகள், நாப்கின்கள் மற்றும் மெத்தைகளில் அச்சிட்டுவதும் குற்றமாக கருதப்பட்டது. கொடியின தரையில் படும் படி வைத்தல், மற்றும் தலைகீழாக பறக்க விடுதலும் அதனை அவமதிப்பதாக கருதப்படுகிறது.

2002ம் ஆண்டின் தேசிய கொடி குறியீட்டில், மூவண்ணங்களுக்கான விளக்கம், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் , அரசு சாந்த நிறுவனங்கள் அவற்றை கையாள்வதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதன் படி பொது, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேசிய கொடியினை நிறுவுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், வணிக நோக்கத்திற்காகவும், தனிப்பட்ட மனிதனை கவுரவிக்கவும் அதை பயன்படுத்த முடியாது. அலங்காரப் பொருளாகவும் தேசிய கொடியினை பயன்படுத்த கூடாது.

கொடி குறியீட்டின் படி ஒன்பது நிலையான அளவீடுகளில் தேசிய கொடி வடிவமைக்கப்பட வேண்டும். 6300×4200, 3600×2400, 2700×1800, 1800×1200, 1350×900, 900×600, 450×300, 225×150 மற்றும் 150×100 (மி.மீ) என்ற அளவீடுகளில் கொடி வடிவமைக்கப்பட வேண்டும். இதில் 450 x300 என்ற அளவில் உள்ள கொடி வி.வி.ஐ..பியின் விமானங்களிலும் 225×150 என்ற அளவில் உள்ள கொடி வி.வி.ஐ.பி.,கார்களிலும் மற்றும் 150×100 என்ற அளவில் உள்ள கொடி மேஜைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் கொடியின் நீளம் மற்றும் அகலம் 3;2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் தேசிய கொடி பெரும்பாலும் கையால் நெசவு செய்யப்பட்ட துணியால் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஊர்வலங்களில் தேசியக் கொடி எடுத்துச் செல்லப்படும் போதும், கொடி யேற்றப்படும் போதும் இறக்கப்படும் போது அதற்கு மரியாதை அளிக்க வேண்டும். மிக முக்கிய தலைவர்கள் இறப்பின் போது தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடலாம். ஆனாலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடக் கூடாது.

சமீப காலங்களில் பிரபலங்கள் சிலர் தேசிய கொடியினை அவமதித்த சம்பவங்கள் எதேச்சையாக நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மூவண்ணக் கொடி வடிவத்தில் உள்ள கேக்கினை வெட்டி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். மந்திரா பேடி மூவண்ணத்திலான சேலையை அணிந்தததால் அவர் மீது வழக்கு பதிவானது. அதே போல் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவும் இதே போன்ற தேசிய கொடி அவமதிப்பு சம்பவத்தில் சிக்கினார். அமிதாப்பச்சன் மற்றும் சாருக்கான் போன்றோரும் இதே போன்ற சர்ச்சயைில் சிக்கினர் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here