திமுக அரசு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது – ஜி.கே.வாசன் பேட்டி

0
97
g.k.vasan

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி அளித்தார்.

’’சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கூட கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளதை தமிழக அரசு தகுந்த முன் ஜாக்கிரதையோடு கையாள வேண்டும். அனைவருக்கும் கொரோனா பரவாத வகையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. வெற்றி பெறக்கூடிய இடங்களை தேர்வு செய்து அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை கேட்டுபெறுவோம்.

திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மக்களின் ஒரே எண்ணம். வாக்குறுதிகளை அள்ளி கொடுத்திருக்கிறார்கள். அதை நம்பியே மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற எண்ணம் ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய நிலையில் செயல்பட வேண்டும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், நகை கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்சாரம் ரீடிங் எடுப்பது போன்ற அறிவிப்புகள் கிடப்பில் கிடக்கிறது என சந்தேகம் எழுகிறது. எனவே அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

பேட்டியின் போது, முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., விடியல்சேகர், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகநாதராஜா, மாநில நிர்வாகிகள் மால்முருகன், என்.டி.எஸ்.சார்லஸ், சிந்தாசுப்பிரமணியன், சரவணன், மாவட்ட தலைவர்கள் கதிர்வேல், அய்யாத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here