“யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் உ.பி.,யின் மாற்றங்கள்” என்ற முழுபக்க விளம்பரத்தில் மம்தா கட்டிய பாலமும் அடக்கம்

0
9
yogi

லக்னோ: ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் “யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் உ.பி.,யின் மாற்றங்கள்” என முழு பக்க விளம்பரத்தை அம்மாநில அரசு இன்று தந்தது. அதில் கோல்கட்டாவில் திரிணாமுல் காங்., அரசால் கட்டப்பட்ட மேம்பால படத்தை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர உள்ளது. அதற்கு தயாராகும் பணிகளை பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தற்போதே முடுக்கிவிட்டுள்ளன. கோவிட் 2ம் அலையால் ஏராளமான மக்கள் உ.பி.,யில் இறந்தார்கள். அவர்களில் சிலரது உடலை அப்படியே கங்கை நதியில் வீசப்பட்டதாக படங்களுடன் செய்திகள் வெளியாகின. அது பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பின்னர் கோவிட்டை படிப்படியாக கட்டுப்படுத்தி இன்று 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோவிட் இல்லாத சூழலை உருவாக்கியிருப்பதாக அரசு சொல்கிறது.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் உ.பி.,யில் நிறைய மாற்றங்கள் நடந்திருப்பதாக பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் தந்தனர். 2017-க்கு முன் உ.பி.,யில் முதலீடு செய்வது என்பது கேலிக்குறியதாக இருந்த நிலை 2021-ல் பெருமளவு மாறியுள்ளதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் 2-வது இடத்தில் உ.பி., இருப்பதாகவும், எளிமையாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 2016-ல் 16ம் இடத்திலிருந்த உ.பி., இன்று 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், முக்கிய நகரங்களுக்கு 48 தேசிய நெடுஞ்சாலைகள், 6 விமான நிலையங்கள், ரயில் வழித்தடங்கள் மூலம் சிறந்த இணைப்பை பெற்றிருப்பதாகவும் அதில் கூறியுள்ளனர்.

இத்தகவலுக்கு கீழ் வெளியிடப்பட்டுள்ள படங்களில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட மேம்பாலம் ஒன்று உள்ளது. அது கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட மா (தாய்) மேம்பாலம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே இரு படங்களையும் ஆதாரத்துடன் பகிர்ந்து பலரும் பா.ஜ., அரசை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

“யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாற்றம் என்பது, மம்தா தலைமையில் உருவான மேற்கு வங்க உள்கட்டமைப்பை திருடி, தங்கள் வளர்ச்சியாக காட்டுவது தான்,” என மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.

இவ்விளம்பரத்தை வெளியிட்ட செய்தித்தாள், “தங்கள் பத்திரிகையின் மார்க்கெட்டிங் துறை தயாரித்து வழங்கிய தவறான படத்தை அட்டைப் படத்தில் கவனக்குறைவாக சேர்த்துவிட்டோம். தவறுக்கு மிகவும் வருந்துகிறோம். அப்படம் அனைத்து டிஜிட்டல் பதிப்புகளிலும் அகற்றப்பட்டுவிட்டது,” என விளக்கம் தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here