ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள் உள்பட பலர் கோரிக்கை

0
17
sterlite

தூத்துக்குடி,செப்.13:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பீச் ரோடு, லயன்ஸ் டவுன், சோரிஸ்புரம், அய்யனடைப்பு, மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுபோன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

பீச்ரோடு, லயன்ஸ்டவுண் பகுதி பெண்கள் ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில், ’’கடந்த 24 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சமுதாய நலத் திட்டங்களை செய்து வருகிறது. மேலும் மீனவ மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மீன்பிடி வலைகள், ஐஸ் பாக்ஸ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வந்தது. இந்த நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக செயல்படாமல் இருப்பதால் எங்களுக்கு நலதிட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமல் ஏழ்மை நிலையில் இருக்கிறோம். இந்த நிறுவனம் மீண்டும் திறக்கபட்டால் அதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தனர்.

அதேபோல் மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், ’’ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக மிக அருகில் உள்ள மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நாங்கள். எங்கள் ஊரில் 460 குடும்பங்கள் இருக்கின்றன. ஊரில் உள்ள மொத்த மக்கள் தொகை 1500 உள்ள நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள் இருந்து வந்தனர். பெண்கள் கூட அங்கே தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி கிடக்கிறது இதனால் எங்கள் கிராமத்தின் வாழ்க்கை வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கையாகும். ஸ்டெர்லைட் ஆலை சமுதாய வளர்ச்சிப் பணிகள் மூலம் எங்கள் கிராமத்தில் உள்ள 390 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்கி வருகிறார்கள். அனைத்து வீடுகளுக்கும் நவீன கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளனர். ஊரில் புதிதாக வீடு கட்டினாலும் உடனே வீடுகளுக்கு வந்து குடிநீர் கழிவறை கட்டிக் கொடுத்து விடுவார்கள். எங்கள் கிராமத்தில் 12 மகளிர் சுய உதவி குழுக்கள் இருக்கின்றன. அதில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சுயதொழில் பயிற்சி கொடுத்துள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சொந்தக்காலில் நிற்கும் தகுதி பெற்றுள்ளனர். இப்படி பல்வேறு சமுதாய வளர்ச்சிப் பணிகளையும் செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோன்று அய்யனடைப்பு ஊராட்சியை சார்ந்தவர்கள் கொடுத்துள்ள மனுவில், ’’அய்யனடைப்பு ஊராட்சிக்குட்பட்ட சோரீஸ்புரம், சிவசக்தி நகர்,கணபதி நகர், இந்திரா நகர்,கைலாசபுரம் ஆகிய கிராமங்களில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் வாழ்வாதாரம் ஸ்டெர்லைட் காப்பர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்கள் கிராமங்களைச் சேர்ந்த 70 சதவீத மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த ஆலை மூலம் வேலையை பெற்று வந்தோம். தற்போது இந்த ஆலை மூடி கிடைப்பதனால் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம் என உடனடியாக அந்த ஆலையை திறக்க ஆவன செய்ய வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’எனது பெயர் மோனிகா. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தில் இருந்து எங்கள் மக்கள் நிறைய உதவிகளை பெற்றிருக்கிறார்கள் நாங்களும் பெற்றிருக்கிறோம்.

மீனவர்களுக்கு மீன்பிடி வலை கொடுத்து உதவிஉள்ளனர். கை குழந்தைகள் முதல் காலேஜ் படிக்கிற பசங்க வரைக்கும் உதவி செஞ்சுருக்காங்க. எந்த நிறுவனமும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யல. ஸ்டெர்லைட் மட்டுமே உதவி செஞ்சி இருக்காங்க. அதுக்கு மேல மருத்துவம் மருத்துவத்துக்கு ரொம்ப முடியாதவங்க எல்லாருக்குமே வந்து உதவி செஞ்சு இருக்காங்க. ஆலையால் எந்த கெடுதலும் இல்லை. அப்படியே எந்த பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சினையை சரிசெய்து திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here