சோதனை என்ற பெயரில் கபட நாடகம்: அதிமுக

0
378
news

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ‘ஸ்டாலின் போலீசார்’ சோதனை என்ற பெயரில் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக அதிமுக தெரிவித்து உள்ளது.

முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு உள்ளிட்ட 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ‘ஸ்டாலின் போலீசார்’ சோதனை என்ற பெயரில் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இது, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகம்.

பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், மக்களின் வெறுப்பிற்கு ஆளாகியுள்ள ‘விடியா அரசு’, மக்களின் எதிர்ப்பு உணர்வை, கசப்பான மன ஓட்டத்தை மாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் போலீசாரை ஏவி பல வித இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இருந்து திமுகவின் தோல்வி பயம் என்பத உள்ளங்கை நெல்லக்கனியாக தெரிகிறது. ஆட்சிக்கு வந்த 120 நாளில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை தொடர்ந்து வீரமணி வீட்டிலும் போலீசாரே முடிவு செய்த 28 இடங்களிலும் சோதனை என்ற பெயரில் ஜனநாயக படுகொலை நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு தோல்வி பயம் ஏற்படும் என்ற சந்தேகப்படும் மாவட்டங்களில் அனைத்திந்திய அதிமுக.,வினரின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதமாக, முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தின் முதல்படியாக வீரமணி வீட்டில் நடக்கும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலமாகவே அரசியல் பார்வையாளர்களும் பொது மக்களும் பார்க்கிறார்கள். இத்தகைய சலசலப்புக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுக அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here