சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட மகா கும்பாபிஷேகம்

0
43
vadapalani murugan

சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (ஜன.23 )கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் ஆன்லைனில் கண்டுகளித்தனர்.

சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோயில். இக்கோயிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, 2021ல் பாலாலயம் செய்யப்பட்டு, ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன.

இதையடுத்து, யாகசாலை பிரவேசம், 19ம் தேதி துவங்கி முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அஷ்டபந்தன மருந்து சார்த்தும் வைபவமும், ராஜகோபுரங்களில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன.

இந்நிலையில், நேற்று காலை 8:30 மணி முதல் விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமங்கள் நடந்தன. பகல், 12:௦௦ மணிக்கு மகா பூர்ணாஹுதி நடந்தது. மாலை 5:30 மணிக்கும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை 10:30 முதல் 11:00 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக பணிகளை நேற்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

பின், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:அறநிலையத் துறையுடன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் இணைந்து, 18 திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் வாயிலாக நிதியை பெற்று, அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், திருப்பணிகள் நிகழ்த்தப்பட்டன.

வடபழநி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம், தேதி குறிப்பிட்டபடி இன்று நடந்தது. இக்கோவில் திருப்பணி குறித்து, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, ஐந்து முறை தக்கார், அறநிலையத் துறை கமிஷனரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இத்தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதியும் தேவையான உதவிகளை செய்துள்ளார். கும்பாபிஷேகத்திற்காக அறுபடை வீடுகள், ஒன்பது பிரசித்தி பெற்ற கோயில்கள், நாட்டில் உள்ள 15 புண்ணிய நதிகளின் நீர் தருவிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேக நாள், இரண்டு மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. தற்போது, கொரோனா நோய் தொற்று பரவும் சூழலில், இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கும்பாபிஷேக நிகழ்வுகளை தடையின்றி நடத்த முதல்வர் உத்தரவிட்டார் . இதில், அர்ச்சகர்கள், உதவியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . அடிப்படை வசதிகள்பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வீட்டில் இருந்தபடி, பலர் ஆன்லைனில் பார்த்தனர்.

திங்கள் கிழமை முதல் வழக்கம் போல, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு தேவையான கொரோனா கட்டுப்பாடுகளுடன், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது வானத்தில் 4 கருடபகவான்கள் வட்டமடித்தன. இதனை பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என விண்ணை பிளக்க மந்திரம் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here