போதை பொருள் பொதுமக்களுக்கு தலைவலியாக இருக்கிறது என்று பார்த்தால் அதன் மூலம் அரசுக்குத்தான் அதிக தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. போதை பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் தண்டிக்கவும் கடுமையான சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் அதையும் தாண்டி அதன் மீது மோகம் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல்வேறு நெருக்கடிக்கு நடுவே கடத்தி வந்த போதை பொருளை பதுக்கி வைப்பதில் மாமன், மறுமகன் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கப்பட்ட மறுமகன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுண் 6வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் மகன் விமல்தான் அந்த மருமகன். அவர் தூத்துக்குடி தென் பாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அது குறித்து அவர் மாவட்ட எஸ்.பிக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
நான் லயன்ஸ் டவுணில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. எனது மனைவி ரோஸ்மலர் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். நான் கப்பலில் வேலைபார்த்து வருகிறேன். இரண்டு வாரத்திற்கு முன்பு, எனது மாமனார் ஜோன்ஸ் ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கொண்டு வந்து எனது வீட்டில் வைக்குமாறு என் மனைவி ரோஸ்மலரிடம் கொடுத்தார். நான் இதெல்லாம் என் வீட்டிற்குள் வரக் கூடாது. நான் இரண்டு குழந்தைகளை வைத்து இருக்கிறேன் என கூறினேன். அதற்கு ஜோன்ஸ் நான் பார்த்து கொள்கிறேன் என்று கோபத்துடன் சென்றுவிட்டார்.
இவர் ஏற்கனவே, என்.சி.பியினால் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் திருவனந்தபுரம் சிறையில் இருந்தார். என் மனைவி எனது அப்பா வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். பின்பு அவர் வீட்டிற்கு வரவில்லை. போன் செய்தபோது, எனது அப்பாவிற்கு உதவி செய்யாத நீ எனக்கு தேவையில்லை என கூறி அவருடைய அப்பா வீட்டிலேயே இருந்து விட்டார்.

கடந்த 10ம் தேதி திசையன்விளை கப்பல் மாலுமி கோர்ஸ்க்கு சென்றுவிட்டு வரும் போது கிரகோப் தெரு(பனிமய மாதா ஆலயம் சமீபம்) பக்கத்திலுள்ள சென்னை பிரியாணி கடைக்கு சென்றுவிட்டு வரும் போது எனது மனைவியின் தம்பி லிவிட்டஸ் தகாத கெட்ட வார்த்தைகளால் பேசி, எங்க அப்பா சொன்னா கேட்கமாட்டியாலே என்று கூறிக் கொண்டே கையில் வைத்திருந்த அருவாளால் எனது தலையில் வெட்டினான். அவனை தள்ளிவிட்டு செல்லும் போது ஜோன்ஸ் அந்த அருவாளை எடுத்து என் தலையில் வெட்டினார்.
லிவிட்டஸ் அவனை விடாதே கொல் என்று சொல்லி விரட்டினார். நான் அங்கிருந்து ஓடாவிட்டால் என் தலையை வெட்டி எடுத்திருப்பான். பிறகு மனவாளன் மருத்துவர் மகன் மதனிடம் சென்று முதலுதவி பெற்றேன். முதலுதவி பெற்றதும் மயக்க நிலையில் வீட்டில் இருந்தேன். காலையில் அரசு மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
எனவே என்னை அருவாளால் தாக்கி கொலை செய்ய வந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வரும் விமலிடம் பேசினோம், ’’இரண்டு, மூன்று நாட்கள் ஆகியும் எனது புகாருக்கு போலீஸ் இதுவரை எஃப்.ஐ.ஆர் போடவில்லை. இன்று எஃப்.ஐ.ஆர் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

இது குறித்து புகார் கூறப்படுபவர் மற்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிப்பதாக இருந்தால் அதையும் இத்துடன் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.