இடம்பெயர் மக்களால் அதிகரிக்கிறது கொரோனா – ”உஷார் மக்களே உஷார்’’

0
15
nadunilai.com

உலக அளவில் பார்க்கும் போது இந்தியா பரவாயில்லை. இந்திய அளவில் பார்க்கும் போது தமிழகம் பரவாயில்லை என்று மனதை தேற்றிக் கொண்டிருந்த காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்த ஊரடங்கு மூலம் ஆரம்ப கட்ட பரவலை தடுத்தது அரசுகள். நோய் பரவல் கட்டுக்குள் இருந்தநிலையில் ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் இடையூறுகள், முடங்கிப்போன மக்களின் வாழ்வாதாரம் பெரிதாக பேசப்பட்டது. சற்று பொருத்துக் கொள்ளுங்கள் என ஆளும் கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஏழை,எளியோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதே வெளியூர்களில் மக்கள் சிக்கி தவிக்கின்றனரே என்று எதிர்கட்சிகள் அபயக்குரல் எழுப்பி வந்தன.

அதனால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு காலம் இருக்கிறது என்றாலும் அதற்குள்ளாகவே சில தளர்வுகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது அரசுகள். அந்த வகையில் இடம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை, வணிகநிறுவனங்களை திறந்துவிடும் நடவடிக்கை என பல தளர்வுகளை செய்து வருகிறது ஆளும் தரப்பு.

முடங்கி கிடந்த மக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில் பழைய படி வெளியில் உலாவி வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பாதிப்பு என சொல்லப்பட்டு வந்த மகராஷ்ட்ராவிலிருந்தும் பலர் தமிழகத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். சில நிபந்தனை மூலம் டீ கடை திறக்கப்பட்டுவிட்டன.

அதுபோன்று வெளியிலிருந்து வருவோரால் தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதாத குறைக்கு தமிழக அரசு உச்சநீதி மன்றம் வரை சென்று போராடி மது விற்பனையை தொடங்கிவிட்டது.

இனிமேல் எந்த அளவிற்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும், எந்த அளவிற்கு வைரஸின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும் என சொல்ல முடியாது. தற்போதைய நிலவரப்படி பல ஊர்களில் வைரஸ் தாக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சிக்கிக் கொண்டவர்களை மீட்க வேண்டும் என்கிற உந்துதலின் அடிப்படையில் இடம்பெயர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதின் விளைவு இது.

இனிமேல் அரசு மீதோ அதிகாரிகள் மீதோ குற்றம் சொல்வதை விட்டுவிட்டு தனக்குத்தானே பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவருடைய உயிரும் அவரவர் கையில்தான் இருக்கிறது. இனிமேல் பாதிக்கப்படுவோரை சிகிச்சை கொடுத்து காப்பாற்றிவிடும் அரசு. அவ்வளவுதான் செய்ய முடியும். ஒவ்வொருவரையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க முடியாது. தன் ஒழுக்கத்தோடு ஒவ்வொருவரும் நடந்து கொண்டு பிழைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

சமூக இடைவெளி என்பதை நிரந்தரமாக கடைபிடிக்க வேண்டும். டீ கடைகளில் டீ குடிப்பதற்கு ஒவ்வொருவரும் சொந்தமாக தம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தமாக இல்லாதவர் கடையில் டீ,காபி வாங்குவதையோ உணவு வாங்குவதையோ முழுவதும் நிறுத்தி விட வேண்டும்.அரசு சொல்லியிருக்கும் நிபந்தனையை தனக்குள் கடைபிடிப்பதன் மூலமே ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here