ஈஷா விவசாய இயக்கம் மற்றும் டாடா அறக்கட்டளை சார்பில் அந்தியூரில் வரும் 17-ம் தேதி இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி களப் பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது.
இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிர் வாரியான சாகுபடி முறை பயிற்சி, பூச்சி மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 70-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 8,00-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கீழ்வாணி கிராமத்தில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் வரும் 17-ம் தேதி இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி களப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில் ஊடுபயிர் மூலம் கணிசமான வருமானம் ஈட்டும் வழிமுறைகள், களைகளை செலவில்லாமல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மஞ்சளுக்கான இயற்கை இடுப்பொருட்கள், சந்தை வாய்ப்பு, விளைச்சலை அதிகரிக்கும் நுணுக்கங்கள் ஆகியவை குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும், அனைத்து விவசாயிகளும் பண்ணையை சுற்றி பார்க்கும் நிகழ்வும், முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வும் நடைபெறும். இந்த களப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.