சாத்தான்குளம், ஜூலை 6:
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழு மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் உள்ள 15 வார்டு பகுதியிலும் சுத்தம், சுகாதாரம் பேணும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் குப்பைகள், கழிவு பொருள்கள் அகற்றி தூய்மைப்படுத்திடும் வகையில் தூய்மை இந்தியா திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேருராட்சி பணியாளர்களுடன் மகளிர் சுய உதவிக்குழுவினரும் சேர்ந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையொட்டி பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் தெருக்களில் குப்பை கொட்டாமல் அனைத்து தெருக்களுக்கும் வாகனங்களில் வரும் தூய்மைபணியாளர்களிடம் குப்பைகளை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் தெருக்களில் குப்பை தேங்குவதை அகற்றி அதில் குப்பை கொட்டாதீர்கள் என வாசகத்துடன் விழிப்புணர்வு கோலம் வரைந்து வருகின்றனர். இதேபோல் பேருராட்சி பகுதியில் வீடுகளில் உள்ள குப்பைகளை வீடு தோறும் வரும் தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு தேவையில்லாத இடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன.
ஆனாலும் ஓடைக்கார தெரு, அருணாச்சலம் செட்டியார்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேருராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். மக்களிடம் தெருவில் குப்பை கொட்டுவதை தவிர்த்து வீடு தேடி வரும் குப்பை வண்டியில் வழங்க வலியுறுத்தினர்.