தூத்துக்குடியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரது மனைவி மீனா (53) இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் முன் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது உடல், உறவினர் ஒப்புதலுடன் மாநகராட்சி மூலமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 321 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது..