ஸ்ரீவைகுண்டம் பகுதி போலீசாருக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் – தொழிலதிபர் வழங்கினார்

0
115
srivaikundam police

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் சரக போலீசாருக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் பரவிடாமல் தடுத்திட அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட 6வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் பணியில் மருத்துவம்-சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு இணையாக காவல் துறையினர் தொடர்ந்து 24மணிநேரமும் கண்காணிப்பு மற்றும் தகுந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் சரகத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், குரும்பூர், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட காவல்நிலையங்களை சேர்ந்த போலீசார் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம், சானிடைசர் மற்றும் கபசுரக்குடிநீர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீவை-புதுக்குடி தொழில்அதிபரும், சமூக ஆர்வலருமான பாலா என்ற பாலமுருகன் கலந்துகொண்டு போலீசாருக்கு முககவசம், சானிடைசர் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அனைத்து காவல்நிலையங்களிலும் போலீசார் மற்றும் வந்துசெல்லும் பொதுமக்கள் கைகளை சானிடைசர் மூலமாக கழுவி சுத்தம் செய்திட ஏதுவான நவீன இயந்திரங்களும் வழங்கப்பட்டது.

இதில், ஸ்ரீவைகுண்டம் நகர அமமுக செயலாளர் சண்முகசுந்தரம், வார்டு செயலாளர் இசக்கிப்பாண்டியன், ஜெ.பேரவை வெல்டிங்முருகன், அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞரணி ஆறுமுகநயினார், சமூகஆர்வலர்கள் சிங்கப்பன், ராஜேந்திரன், வல்லை அய்யப்பன், கருப்பசாமி, மணியாச்சி மணி மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, டி.எஸ்.பி., சுரேஷ்குமார் கூறியதாவது, ஸ்ரீவைகுண்டம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தடுப்பு காவல் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். எஸ்.பி.., ஜெயக்குமார் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார்கள் அனைவருக்கும் முககவசம், சானிடைசர் போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து போலீசாருக்கு இவை வழங்கப்படவும் இருக்கிறது.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் யாரும் முககவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேநேரத்தில் வரும் நாட்களில் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முககவசம் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சமூகஆர்வலர்கள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கும் முககவசம் வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here