தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 361 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தாமோதர நகர் பகுதியில் 55 பேருக்கு நோய் பரவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்த நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையில் தாமோதர நகர் மெயின் ரோடு பகுதியில் தகர சீட்டுகளால் வழியடைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் தாமோதர நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தாமோதர நகர் பகுதி தூத்துக்குடியின் மைய பகுதி என்பதால் அப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
’’முன்னறிவிப்பு எதுவுமின்றி தாமோதர நகர் பகுதியினை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து சுற்றிலும் வழியை மறுத்துள்ளனர். இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கரோனாவுக்கு நிவாரண தொகையாக 1,000 ரூபாய் வழங்கியது. ஆனால் அந்த ஆயிரம் ரூபாயை வைத்து 4 மாதங்களுக்கு பிழைப்பு நடத்த முடியுமா? இதை அரசாங்கம் யோசிக்காதா?. இன்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த பகுதியை நோய் கட்டுப்பட்டு மண்டலமாக அறிவித்து பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாரிடம் கேட்டதற்கு உள்ளிருந்து யாரும் வெளியே செல்வதற்கும் வெளியிலிருந்து யாரும் உள்ளே வருவதற்கும் அனுமதி இல்லை என்று கறாராக கூறுகின்றனர். கரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்களோ இல்லையோ அதிகாரிகள் செய்யும் அட்டூழியத்தால் கண்டிப்பாக குடும்பம் குடும்பமாக உயிர் இழப்பார்கள்’’ என்று மிகவும் ஆவேசமாக கூறினார்.