தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம். தொடர்ந்து பத்து நாட்கள் விசேஷ திருப்பலிகள் நடக்கும் . இந்த பத்து நாட்களும் தூத்துக்குடி விழாக் கோலம் பூண்டிருக்கும். அத்தகைய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது.

அதேவேளையில் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் மக்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வாக அந்நிகழ்ச்சி நடந்தது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கொடியேற்றினார். கொடியேற்றம், திருப்பலி சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் நேரில் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.